தமிழகம்

குஷ்புவைத் தேர்ந்தெடுத்தால் டெல்லி வரை சென்று உரிமையுடன் பேசுவார்: முதல்வர் பழனிசாமி பேச்சு

செய்திப்பிரிவு

குஷ்பு சிறந்த பேச்சாளர், திறமையானவர். அவர் வெற்றி பெற்று வரும்பொழுது, இந்த நாடு வளம் பெறும். இந்தத் தொகுதி மக்களுக்குப் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். உங்களின் கோரிக்கைகளை டெல்லி வரை கொண்டு சென்று உரிமையுடன் பெற்றுத் தருவார் என முதல்வர் பழனிசாமி பேசினார்.

ஆயிரம் விளக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் முதல்வர் பழனிசாமி இன்று பேசியதாவது:

“நடைபெற இருக்கின்ற சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் நமது கூட்டணிக் கட்சியான பாஜக சார்பில் போட்டியிடும் நமது வெற்றி வேட்பாளர் குஷ்பு திரைப்படத்தில் நட்சத்திரமாக ஜொலித்தார். அரசியலிலும் நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார். அவர் உங்களுடைய தொகுதியிலே போட்டியிடும் வாய்ப்பை பாஜக வழங்கியிருக்கிறது. சிறந்த பேச்சாளர், திறமையானவர்.

அவர் வெற்றி பெற்று வரும்பொழுது, இந்த நாடு வளம் பெறும். இந்தத் தொகுதி மக்களுக்குப் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். மேலும், அவர் வெற்றி பெற்று வரும்போது, உங்களின் கோரிக்கைகளை டெல்லி வரை கொண்டு சென்று உரிமையுடன் பெற்றுத் தருவார். தமிழகத்தில் முதன்மையான திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்றால் அதற்கு மத்திய அரசின் அனுமதியும், நிதியும் வேண்டும். அவை கிடைக்க வேண்டும் என்று சொன்னால், அதனைப் போராடிப் பெற்றுத் தருகின்ற திறமை வாய்ந்த வேட்பாளர் இங்கே போட்டியிடுகின்றார்.

குஷ்புவை வெற்றி பெறச் செய்யுங்கள். மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சிக்கு வந்தால் தன் குடும்பத்தினர்தான் அதிகாரத்துக்கு வர வேண்டும் என்று விரும்புகின்றவர் திமுக தலைவர் ஸ்டாலின். திமுகவிற்கு தலைவர் ஸ்டாலின், இளைஞரணிக்குத் தலைவர் உதயநிதி, மகளிரணிக்குத் தலைவி கனிமொழி. இப்படிப் பதவிகள் அனைத்தும் ஒரு குடும்பத்தினருக்கு மட்டுமே. ஆனால், பாஜக ஆகட்டும், அதிமுக ஆகட்டும், உழைக்கின்றவர்களுக்கு பதவிகளைக் கொடுத்து அழகு பார்க்கும்''.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.

SCROLL FOR NEXT