எங்களைப் பயன்படுத்தத் தவறினால் மீண்டும் ஊழல் சாக்கடையில் மாட்டுவீர்கள் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் புதுச்சேரியில் பேசினார்.
புதுச்சேரியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று பிரச்சாரம் செய்தார்.
அவர் புஸ்ஸி வீதி மணிக்கூண்டு அருகே பேசும்போது, "கோவையில் நின்றாலும் புதுச்சேரியும் என் ஊர்தான். பாரதியைப் போல புதுச்சேரி எனக்கும் சொந்தம். எங்களின் வேட்பாளர்கள் மக்களில் ஒருவராக இருப்பர். தமிழகம், புதுச்சேரியில் அனைத்துத் தொகுதிகளுக்கும் சென்று பிரச்சாரம் செய்ய வேண்டும். நேரம் போதவில்லை.
ஹெலிகாப்டரில் சுற்றுவதை விமர்சிக்கிறார்கள். எங்களுக்கு மாண்புமிகு தேவையில்லை. உங்களை மாண்புபடுத்துவோம். எனக்கு அரசியல் தொழில் கிடையாது. அதனால் அரசியல் தெரியாது என்று கருத வேண்டாம். எங்களைப் பயன்படுத்தத் தவறினால் ஊழல் சாக்கடையில் மாட்டுவீர்கள்" என்று குறிப்பிட்டார்.
அங்கே கூட்டத்தில் இருந்து சத்தம் போட்டவரைக் கண்டித்த கமல், பிரச்சாரத்தின்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதற்கு மன்னிப்பு கோரினார்.
அதைத் தொடர்ந்து முதலியார்பேட்டை வானொலித் திடலில் புதுச்சேரி வேட்பாளர்களை அறிமுகம் செய்து கமல் பேசியதாவது:
"இது ஒரு சூறாவளிப் பயணம். அவசர அவசரமாக வந்துள்ளேன். புதுச்சேரி எனக்கு மிகவும் பிடித்த ஊர். இந்த வேட்பாளர்கள் உங்களில் ஒருவர்தான். புதுச்சேரியின் புத்துணர்ச்சிக்காக இவர்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். மக்களின் பல்லக்கை என் தோளில் சுமப்பதற்காக வந்துள்ளேன். இவர்களுக்கு மற்றவர்களின் அரசியல் தெரியாது. எங்களின் சிந்தனை மக்களின் நலன் மட்டுமே.
மக்களின் சேவையில் இருந்தவர்களை வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளோம். அவர்கள் செய்த பணிகள்தான் எனக்கு அவர்களை அடையாளம் காட்டின. பெயர் தெரியாமல் மக்கள் பணியாற்றியவர்களைப் பிரபலப்படுத்த வேண்டியது அடியேன் வேலை என எண்ணி நான் வந்துள்ளேன். எங்கள் வேட்பாளர்களை உங்கள் வேட்பாளர்களாக, வெற்றி வேட்பாளர்களாக்க வேண்டும். நீங்கள் இதனைச் செய்தால் புதுச்சேரி புதுப்பொலிவு பெறும்.
நீங்கள்தான் இவர்களைக் கண்காணிக்க வேண்டும். இவர்களுக்கு வழங்கப்படும் நிதி எப்படிச் செலவிடப்பட்டது? என நீங்கள் கேள்வி கேட்க முடியும். இவர்களிடம் சேவையைப் பெறும் உரிமை உங்களுக்கே உண்டு. இதற்குத் தகவல் அறியும் உரிமைச் சட்டமே உண்டு. பாதாளச் சாக்கடை, குடிநீர், போக்குவரத்து நெரிசல் உட்படப் பல பிரச்சினைகள் புதுச்சேரியில் உள்ளன. அவற்றைக் களைய இவர்கள் பாடுபடுவார்கள். இந்தக் கூட்டம் உங்களுக்கு மிக தேவை. இளைஞர்கள், முதல் முறையாக வாக்களிக்க உள்ளவர்கள், யோசித்து வாக்களியுங்கள். புதுவையை மாற்றுங்கள். நாளை நமதே."
இவ்வாறு கமல் பேசினார்.