திருச்சி கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகமான மாநகராட்சி கோட்ட அலுவலக வளாகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்கள் பெயர், சின்னம் பொருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள். 
தமிழகம்

திருச்சி மேற்கு தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்படுமா? - மாவட்ட ஆட்சியர் எஸ்.திவ்யதர்ஷினி பதில்

ஜெ.ஞானசேகர்

திருச்சி மேற்கு தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்படுமா என்ற கேள்விக்கு, மாவட்டத் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான எஸ்.திவ்யதர்ஷினி பதில் அளித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்கள் பெயர், சின்னம் பொருத்தும் பணி இன்று (மார்ச் 29) தொடங்கியது.

இந்தப் பணியை திருச்சி மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்டத் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான எஸ்.திவ்யதர்ஷினி ஆய்வு செய்தார். அப்போது, செய்தியாளர்களிடம் ஆட்சியர் திவ்யதர்ஷினி கூறியதாவது:

"திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்கள் பெயர், சின்னம் பொருத்தும் பணி இன்று தொடங்கியுள்ளது. வாக்களித்ததை உறுதி செய்யும் கருவியை ஆய்வு செய்வது உட்பட இந்தப் பணி நிறைவடைய 24 மணி நேரத்துக்கு மேல் ஆகலாம்.

பேட்டைவாய்த்தலை பகுதியில் கடந்த 23-ம் தேதி அதிமுக எம்எல்ஏ எம்.செல்வராசு மகனின் காரில் இருந்து ரூ.99 லட்சத்து 73 ஆயிரத்து 500, மணப்பாறையில் நேற்று அதிமுக எம்எல்ஏ ஆர்.சந்திரசேகரின் ஜேசிபி ஓட்டுநர் வீட்டு வைக்கோல் போரில் இருந்து ரூ.1 கோடி பறிமுதல் செய்யப்பட்டது சம்பவங்கள் தொடர்பாகத் தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கையை எடுக்கும்.

கவர்களில் பணம் வைத்து காவல் நிலையங்களிலேயே காவல் துறையினருக்கு விநியோகம் செய்தது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் பறக்கும் படையினரின் சோதனை தீவிரப்படுப்பத்தப்பட்டுள்ளது.

திருச்சி மேற்கு தொகுதியில் தேர்தல் ரத்து, ஒத்திவைப்பு என்று வெளியாகும் எந்த வதந்திகளுக்கும் இடம் கொடுக்க வேண்டாம். அதிகாரபூர்வமான அறிவிப்பு வந்தால் பொதுமக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டிய கடமை எங்களுக்கு உண்டு".

இவ்வாறு திவ்யதர்ஷினி தெரிவித்தார்.

SCROLL FOR NEXT