பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளாரைச் சந்தித்துப் பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன். 
தமிழகம்

பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார்- கமல் சந்திப்பு: அடிமட்ட மக்களுடன் தொடர்பில் இருக்க ஆதீனம் அறிவுறுத்தல்

பெ.ஸ்ரீனிவாசன்

மக்களிடம் சொல்லும் விஷயங்களை அப்படியே செயல்படுத்த வேண்டும் என்றும், அடிமட்ட மக்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும் என்றும் கமல்ஹாசனுடனான கலந்துரையாடலில் பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் தெரிவித்தார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாள் நெருங்கும் நிலையில், அவர் தனது பிரச்சாரத்தைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்.

தனது கட்சியினருக்காகத் தமிழகம் முழுவதும் சென்று பிரச்சாரம் செய்யும் கமல், தான் போட்டியிடும் கோவை தெற்கு தொகுதியிலும் இடைவிடாமல் திட்டமிட்டு, பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.

அதன் தொடர்ச்சியாக கோவை பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாரை இன்று காலை நேரில் சென்று சந்தித்த கமல் அவரிடம் ஆதரவு கோரினார். சிறுது நேரம் கமல்ஹாசனும், மருதாசல அடிகளாரும் கலந்துரையாடினர்.

கலந்துரையாடலின்போது, கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிட முடிவெடுத்ததற்கு மகிழ்ச்சி தெரிவித்த மருதாசல அடிகளார், கமல்ஹாசனின் செயல்பாடுகளை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், மத நல்லிணக்கத்துக்காக கமல்ஹாசனின் குரல் ஓங்கி ஒலிப்பதாகவும் கூறினார்.

மேலும் மருதாசல அடிகளார் பேசும்போது, ''மக்களுக்கு ஊடகங்கள் மூலமாக அதிகச் செய்திகளைச் சொல்கிறீர்கள். சொல்லும் விஷயங்களை அப்படியே செயல்படுத்த வேண்டும், சமூகத்தின் அடிமட்டத்தில் உள்ள மக்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும். அப்படியான ஒரு நிலையைத் தொடர்ந்தால், மறுமலர்ச்சியை எதிர்பார்க்க முடியும்.

பேரூர் தமிழ்க் கல்லூரி மூலமாகவும், நிர்வாகம் மூலமாகவும் கிராம சபை, தீண்டாமை ஒழிப்பு மற்றும் பெண்கள் முன்னேற்றம் போன்றவற்றுக்காகக் குரல் கொடுத்து வருகிறோம்'' என்று தெரிவித்து, கமல்ஹாசனுக்குத் தனது வாழ்த்துகளையும் கூறினார்.

நிச்சயமாகச் சொல்லும் விஷயங்களைச் செயல்படுத்துவேன் என்று மருதாசல அடிகளாரிடம் கூறிய கமல்ஹாசன், அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

பொதுமக்களுடன் சந்திப்பு

முன்னதாக, ரேஸ்கோர்ஸ் பகுதியில் பொதுமக்களிடம் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட கமல்ஹாசன், ரேஸ்கோர்ஸ் மற்றும் அதனைச் சார்ந்த குடியிருப்போர் சங்க (ரானா) நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசினார்.

SCROLL FOR NEXT