தமிழகம்

கடைசிச் சொட்டு ரத்தம் இருக்கும்வரை மக்களுக்குச் சேவை செய்வேன்: அமைச்சர் விஜயபாஸ்கர் உருக்கம்

செய்திப்பிரிவு

கடைசிச் சொட்டு ரத்தம் இருக்கும்வரை தமிழக மக்களுக்காகத் தொடர்ந்து சேவையாற்றுவேன் என்று சுகாதாரத் துறை அமைச்சரும், விராலிமலை அதிமுக வேட்பாளருமான விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடைபெறுவதை ஒட்டி, பிரச்சாரக் களம் சூடுபிடித்துள்ளது. வேட்பாளர்கள் அனல் பறக்கப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். புதுக்கோட்டை, விராலிமலை தொகுதியில் அதிமுக சார்பில் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் போட்டியிடுகிறார்.

விராலிமலை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்த அவர், தேரடி வீதி உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று வாக்குச் சேகரித்தார். அப்போது அதிமுக தொண்டர்களும் மக்களும் அவருக்கு மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதைத் தொடர்ந்து மக்கள் மத்தியில் அவர் பேசும்போது, ''கஜா புயலின்போது, கதவைத் தட்டி உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டது உங்கள் தம்பி விஜயபாஸ்கர். அதேபோல கரோனா காலத்தில் உங்கள் வீட்டுக் கதவைத் தட்டி என்ன உதவி வேண்டும் என்று கேட்டதும் உங்கள் தம்பி விஜயபாஸ்கர்தான்.

மக்கள் அனைவரும் நமக்கு வேண்டியவர்கள். அவர்கள் யாரும் கஷ்டப்படக் கூடாது என்பதற்காக ஒவ்வொருவருக்கும் என்னால் முடிந்த உதவியைச் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தேன். அந்தக் கடினமான நேரத்தில் உங்களுடன் நின்றது உங்கள் வீட்டுப் பிள்ளை விஜயபாஸ்கர்.

தமிழ்நாட்டிலேயே எதிர்த்துப் போட்டியிடும் வேட்பாளரின் பெயரைக் கூடச் சொல்லாமல் பிரச்சாரம் செய்வது உங்கள் விஜயபாஸ்கர்தான். ஆனால், என்னை எவ்வளவு கரித்துக் கொட்ட முடியுமோ அவ்வளவு செய்கின்றனர். என் கடைசிச் சொட்டு ரத்தம் இருக்கும் வரை மக்களுக்கு உதவி செய்வேன், கொடுப்பேன், உதவிக்கொண்டே இருப்பேன். எனக்கு மனது இருக்கிறது, அதை யாராலும் தடுக்க முடியாது'' என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT