தமிழகம்

அமைச்சர்களாக உள்ள 3 'மணி'களுக்கும் பணம்தான் குறிக்கோள்: பிரச்சாரத்தில் ஸ்டாலின் பேச்சு

ந. சரவணன்

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த உடன் மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டு போன்ற விழாக்களுக்கு தடையில்லாச் சான்று வழங்கப்படும் என அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்தார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் திமுக கூட்டணிக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் நல்லதம்பி (திருப்பத்தூர்), தேவராஜ் (ஜோலார்பேட்டை), நயீம்அகமது (வாணியம்பாடி), வில்வநாதன் (ஆம்பூர்) ஆகியோரை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகே இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது:

‘‘தேர்தலுக்காக வாக்கு கேட்க மட்டும் நான் இங்கு வரவில்லை. உங்களில் ஒருவனாக, உங்கள் சுக, துக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் உரிமையுள்ளவனாக நான் இங்கு வந்துள்ளேன்.

முதல்வர் பழனிசாமி அமைச்சரவையில் 3 மணிகள் உள்ளனர். தங்கமணி, வேலுமணி, வீரமணி. இவர்களுக்குப் பணம்தான் குறிக்கோள். வேலுமணி அப்பட்டமாக ஊழல் செய்பவர், தங்கமணி சத்தமில்லாமல் ஊழல் செய்பவர். இந்தத் தொகுதியைச் சேர்ந்த வீரமணி பற்றி சொல்லவே வேண்டாம். அவர் எப்படிப்பட்டவர் என்று உங்களுக்கே தெரியும்.

அவர் அமைச்சராக இருந்த காலத்தில் இந்த மாவட்டத்துக்காக எதையும் செய்யவில்லை. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வீரமணி வீட்டில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தினர். ஆனால் ரெய்டு முடிவு என்ன? என்ன நடவடிக்கை? எடுத்தார்கள் என்பது இதுவரை வெளிவரவில்லை.

அதேபோலத்தான் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் வீடுகளிலும், அவர்களது உறவினர்கள் வீடுகளிலும் ஐடி ரெய்டு நடந்தது. அப்போது முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றினர். ஆனால், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்பது இதுவரை வெளிவரவில்லை. பாஜக அரசு அதிமுக அமைச்சர்களின் வருமானத்தின் ஆதாரங்களைக் கைப்பற்றிக்கொண்டு அவர்களைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அதில் கே.சி.வீரமணியும் ஒருவர்.

அமைச்சராக உள்ள வீரமணி இடங்களை வளைத்துப் போடுவதில் கை தேர்ந்தவர். வேலூரில் தனியாருக்குச் சொந்தமான இடத்தை வளைத்துப் போடும் முயற்சியில் நீதிமன்றம் வரை விவகாரம் சென்றது. இது அனைவருக்கும் தெரியும். இது மட்டுமின்றி மணல் கொள்ளை, நில அபகரிப்பு, விலை மதிப்புள்ள இடங்களை மிரட்டி தன் குடும்ப உறுப்பினர்கள் பெயருக்கு மாற்றுவது போன்ற பல வேலைகளை வீரமணி செய்து வருகிறார். அவர் இந்தத் தேர்தலில் தோற்கடிக்கப்பட வேண்டும். அதை இந்தத் தொகுதி மக்கள் செய்து காட்ட வேண்டும்.

சிறுபான்மையினர் மீது அக்கறை உள்ள அரசாக அதிமுக நாடகமாடுகிறது. மத்திய அரசு சிறுபான்மையினருக்கு எதிராகச் சட்டங்களை நிறைவேற்றியபோது, அதை ஆதரித்து அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் வாக்களித்தனர். திமுக உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தனர். இப்போது, தேர்தல் நேரம் என்பதால் சிறுபான்மையினருக்கு ஆதரவாகச் செயல்படுவதாக அதிமுகவினர் வேஷம் போடுகின்றனர்.

இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேறக் காரணமாக இருந்தவர்கள் அதிமுக, பாமக உறுப்பினர்கள். திமுக ஆட்சிக்கு வந்த உடன் இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும். புதுடெல்லியில் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் கடந்த 124 நாட்களுக்கு மேலாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அதைப் பற்றிக் கவலைப்படாத முதல்வர் பழனிசாமி தான் ஒரு விவசாயி எனக் கூறி வருகிறார்.

திமுக தேர்தல் அறிக்கையில் சொன்னதை ஆட்சி அமைந்த உடன் நிறைவேற்றுவோம். நாங்கள் செய்வதைத்தான் சொல்லுவோம், சொல்வதையே செய்வோம். 505 உறுதிமொழிகளும் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போன்ற விழாக்களுக்கு தடையில்லாச் சான்று திமுக ஆட்சிக்கு வந்த உடன் வழங்கப்படும்.

பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்த வேண்டுமென்றால் திமுக ஆட்சிக்கு வர வேண்டும். திமுக ஆட்சிக்கு வர இங்குள்ள கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும்.

சேலம் மாவட்டத்தில் எடப்பாடி தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்துக்காக நான் சென்றிருந்தேன். அப்போது மக்கள் எழுச்சியை நான் கண்டு வியந்தேன். இந்த முறை எடப்பாடி தொகுதியில் பழனிசாமி தோல்வியடைவார். டெபாசிட் கூட வாங்கப் போவதில்லை. கூட்டுறவு வங்கியில் பெறப்பட்ட கடன் தள்ளுபடி செய்தவதாக அறிவித்த பழனிசாமி அதற்காக ரூ.5 ஆயிரம் கோடியை ஒதுக்கீடு செய்வதாக அறிவித்துள்ளார். பாக்கியுள்ள ரூ.7 ஆயிரம் கோடியை யார் தள்ளுபடி செய்வார்கள்? திமுக ஆட்சிக்கு வந்த உடன் இந்த ஸ்டாலின் தான் அந்த 7 ஆயிரம் ரூபாய் கோடி கடனைத் தள்ளுபடி செய்யப் போகிறேன்’’.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

SCROLL FOR NEXT