தமிழகம்

திமுகவினர் என்னை கேலி செய்யலாம்; குறைகூற முடியாது: அமைச்சர் செல்லூர் ராஜூ

செய்திப்பிரிவு

திமுகவினர் என்னை கேலி வேண்டுமானால் செய்யலாம். குறைகூற முடியாது. தெர்மாகோலை நான் கண்டுபிடிக்கவில்லை. அது அதிகாரிகளின் திட்டம் என்று மதுரை மேற்கு தொகுதி அதிமுக வேட்பாளரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடைபெறுவதை ஒட்டி, பிரச்சாரக் களம் சூடுபிடித்துள்ளது. வேட்பாளர்கள் அனல் பறக்கப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை மேற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளராக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ களம் காண்கிறார்.

தனது தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று பிரச்சாரம் மேற்கொண்ட செல்லூர் ராஜூ, மக்களிடம் பேசும்போது, ''மதுரை மக்களின் குடிநீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்ய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மக்களுக்காகத் தடுப்பணைகளைக் கட்டி வருகிறது. நான் கொண்டு வந்த திட்டங்களை திமுக தலைவர்களால் மறக்க முடியாது.

என்னுடைய துறையைப் பற்றி, என்னைப் பற்றி எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உட்பட திமுக தலைவர்கள் யாரும் குறைசொல்ல முடியாது. என்னை யாரும் குற்றம் சொல்ல முடியாத அளவுக்கு நடந்திருக்கிறேன். திமுகவினர் என்னை கேலி, கிண்டல் பேசுவார்கள். அதுவும் நான் மதுரைக்குப் பாடுபட்டதற்காகத்தான் செய்வார்கள். தெர்மாகோல் திட்டத்தை நான் கண்டுபிடிக்கவில்லை. அதிகாரிகள் சொல்லி நான் திறந்து வைத்தேன். ஆனால், தெர்மாகோல் ராஜூ என இன்று உலகம் பூராவும் பரவ வைத்துவிட்டார்கள்.

ஸ்டாலின், அவரின் மகன் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்ட எல்லோரும் இதுகுறித்துப் பேசுகின்றனர். ஆனால், அது எதையும் நான் பொருட்படுத்துவது இல்லை. அதே நேரத்தில் நான் தவறு செய்தேன் என்று எங்கேயும் திமுகவினரால் சொல்லிவிட முடியாது'' என்று செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

SCROLL FOR NEXT