திருச்சி மாவட்டம், மணப்பாறை தொகுதி அதிமுக எம்எல்ஏ ஆர்.சந்திரசேகர். இந்தத் தொகுதியில் தொடர்ந்து 2-வது முறையாக எம்எல்ஏவாகப் பதவி வகிக்கும் இவர், 3-வது முறையாகப் போட்டியிடுகிறார்.
இந்த நிலையில், எம்எல்ஏவிடம் நீண்ட காலமாக ஜேசிபி ஓட்டுநராக உள்ள வலசுப்பட்டியைச் சேர்ந்த அழகர்சாமி, மற்றும் ஒப்பந்ததாரர்களான தங்கபாண்டியன், கோட்டைப்பட்டியைச் சேர்ந்த முருகானந்தம் என்ற ஆனந்த் (32) ஆகியோர் வீடுகளில் நேற்று இரவு வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.
இதில், அழகர்சாமி வீட்டின் பின்னால் வைக்கோல் போரில் இருந்து ரூ.500 கட்டுகளாக சுமார் ரூ.1 கோடியைக் கைப்பற்றியுள்ளனர்.
திருச்சி வருமான வரித்துறை இணை இயக்குநர் மதன்குமார் தலைமையில் 3 குழுவினர் தனித்தனியே 3 இடங்களிலும் இந்த சோதனையை நடத்தியுள்ளனர்.
வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காகப் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலையடுத்து இந்த சோதனை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
சோதனை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, வருமான வரித்துறையினர் பதில் எதுவும் கூறாமல் சென்றுவிட்டனர்.
வருமான வரித்துறை சோதனை குறித்து தகவலறிந்து தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்தனர். ஒரு வாரத்தில் நடந்த 3-வது சம்பவம் இதுவாகும்.
முசிறி எம்எல்ஏ எம்.செல்வராசு தொடர்ந்து 2-வது முறையாக முசிறி தொகுதியில் போட்டியிடும் நிலையில், கடந்த 23-ம் தேதி ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட பேட்டைவாய்த்தலை பகுதியில் செல்வராசு மகன் ராமமூர்த்தியின் காரில் இருந்து ரூ.99,73,500 ரொக்கத்தைத் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
இதேபோல், திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளருக்கு ஆதரவாக அஞ்சல் வாக்களிப்பதற்காக வழக்கறிஞர் மூலம் காவல் துறையினருக்குப் பணம் விநியோகம் செய்யப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில் திமுக வழக்கறிஞர் உட்பட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, காவல் ஆய்வாளர் உட்பட காவல் துறையினர் 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகின்றனர்.
இந்தநிலையில், மணப்பாறை எம்எல்ஏவின் ஜேசிபி ஓட்டுநரரின் வீட்டு வைக்கோல் போரில் இருந்து சுமார் ரூ.1 கோடியை வருமான வரித்துறையினர் கைப்பற்றியது திருச்சி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.