பாஜகவின் நட்சத்திர பிரச்சாரகர் பட்டியலில் இடம் பிடித்துள்ள, தமிழ்நாடு ஏகத்துவ ஜமாஅத் தலைவர் வேலூர் இப்ராஹிம், ‘தனது பிரச்சார அனுபவங்கள்’ குறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியதாவது:
தேசிய அளவில், தேசத்தின் வளர்ச்சி, பாதுகாப்பு, ஒட்டுமொத்த இந்தியர்களை ஒருங்கிணைக்கும் கட்சியாக உள்ள பாஜகவின் ஆட்சி தொடர வேண்டும் என ஒரு இஸ்லாமிய அமைப்பின் தலைவராக கடந்த 3 ஆண்டுகளாக, அக்கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறேன். பாஜக போட்டியிடும் 20 தொகுதிகளை மையப்படுத்தி தீவிர பிரச்சாரத்திலும் ஈடுபட்டுள்ளேன்.
நான் இஸ்லாமிய மக்கள் வசிக்கும் பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ள எஸ்டிபிஐ, பிஎப்ஐ போன்ற சில அடிப்படைவாத கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதை காரணம் காட்டி, எனது உயிருக்கு ஆபத்து என காவல்துறையினரும் என்னைத் தடுக்கின்றனர். அவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல், எனது உயிருக்கு அச்சுறுத்தல் என சுட்டிக்காட்டியே என்னைப் பிரச்சாரம் செய்ய விடாமல் தடுக்கின்றனர்.
இஸ்லாமியர்களின் பாதுகாவலன் பாஜக மத்திய பாஜக அரசு, இஸ்லாமியர்களுக்காக 17 வகையான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இஸ்லாமியர்களின் ஒரே பாதுகாவலன் பாஜக. மேலும், இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதிகளில் செயல்படும் அடிப்படைவாத அமைப்புகள் இஸ்லாமிய இளைஞர்களை மத்திய, மாநில அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட தூண்டி விடுகின்றனர். இதுபோன்றவற்றை குறிப்பிட்டும், இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்தால் மத நல்லிணக்கத்துக்கும், சிறுபான்மை சமூகத்தின் பாதுகாப்புக்கும் கேள்விக்குறியாகிவிடும் என்றும் பிரச்சாரம் செய்கிறேன்.
இஸ்லாமிய மக்களின் மன நிலையில், தற்போதைய சூழலில் வந்துள்ள மாற்றத்துக்கு சில அடிப்படைவாத சக்திகள், சில இஸ்லாமிய அமைப்புகளின் தூண்டுதலே காரணம். தேசத்துக்கு எதிராக, மத நல்லிணக்கத்துக்கு எதிராக தொடர்ந்து செயல்படும் எஸ்டிபிஐ, பிஎப்ஐ போன்றோர்களுக்கு அமமுக உள்ளிட்ட கட்சியினர் சீட் அளித்து ஆதரிக்கின்றனர். திமுகவும் அதே மனநிலையை தான் கொண்டுள்ளது. சிஏஏ சட்டத்தால் இந்திய இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று வெளிப்படையாகத் தெரிந்தாலும் கூட, சிஏஏவை உள்ளே விட மாட்டோம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுவது சந்தர்ப்பவாத அரசியலே.
பாஜக என்ற பிம்பத்தை காட்டி, எந்த நலத் திட்டங்களையும் செய்யாமல், இஸ்லாமியர்களின் வாக்குகளை வாங்கி விடலாம் என திமுகவினர் நினைக்கின்றனர். நான் பாஜகவிடம் பணம் வாங்கிக் கொண்டு அவர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறேன் என்பது தவறான கருத்து. வறுமையில் உள்ள நான் தற்போதும் ஓட்டு வீட்டில்தான் வசிக்கிறேன். எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும், மதநல்லிணக்கத்துக்கான எனது பிரச்சாரம் தொடரும் என்றார்.
இதுபற்றி எஸ்டிபிஐ கட்சியின் கோவை மாவட்டத் தலைவர் கே.ராஜாஉசேன் கூறும்போது, ‘‘இஸ்லாமிய மக்களுக்கு பாஜக அரசு என்ன துன்பங்கள் தருகிறது என்பதை அனைவரும் அறிவர். இதற்கு துணை போகக்கூடிய வகையில், பாஜகவுக்கு ஆதரவாக இவர்களைப் போன்றவர்கள் செயல்படுகின்றனர். மக்களின் பிரச்சினைகளை முன்னிலைப்படுத்திதான் நாங்கள் போராட்டங்களை முன்னெடுக்கிறோம்’’ என்றார்.