தமிழகம்

செல்போன் மூலம் சீசன், பிளாட்பார டிக்கெட்: சென்னையில் ரயில்வே புதிய வசதி அறிமுகம்

செய்திப்பிரிவு

சென்னை மின்சார ரயில் சீசன் டிக்கெட், பிளாட்பார டிக்கெட் ஆகியவற்றை செல்போன் செயலி மூலம் பெறும் வசதி இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டிக்கெட்டை பிரின்ட்கூட எடுக்கத் தேவையில்லை. செல்போனில் பதிவிறக்கம் செய்ததையே பரிசோதகரிடம் காட்டலாம்.

சென்னையில் புறநகர் பகுதிகளுக்கு இயக்கப்படும் மின்சார ரயில்களில் தினமும் 5 லட்சம் முதல் 6 லட்சம் வரை டிக்கெட்கள் விற்கப்படுகின்றன. காலை, மாலை நேரங்களில் அனைத்து நிலையங்களிலும் கவுன்ட்டர்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கவுன்ட்டர்களில் நெரிசலை தவிர்ப்பது மற்றும் நேரத்தை மிச்சப்படுத்தும் நோக்கில் செல்போன் மூலம் டிக்கெட் பெறுவதற்கான ‘செல்போன் செயலி’ (App) சேவை கடந்த ஏப்ரல் 22-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த சேவை சென்னை கடற்கரை - கும்மிடிப்பூண்டி, கடற்கரை - திருவள்ளூர், கடற்கரை - வேளச்சேரி, கடற்கரை - செங்கல்பட்டு ஆகிய மார்க்கங்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டது. இது பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தற்போது புறநகர் மின்சார ரயில்களுக்கான சீசன் டிக்கெட், பிளாட்பார டிக்கெட் ஆகியவற்றையும் செல்போன் மூலம் பெறும் வசதி இன்று அறிமுகம் செய்யப்பட்டது. இதனால், புறநகர் ரயில்களில் சீசன் டிக்கெட் பயன்படுத்தும் 52 சதவீத பயணிகள் பயன் அடைவார்கள். ‘ஆண்ட்ராய்டு’ வசதியுள்ள ஸ்மார்ட் போன்கள் மூலம் இந்த சேவையை பெறலாம். அதை பிரின்ட் எடுப்பது போன்றவைகூட தேவையில்லை. செல்போனில் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து, அதையே டிக்கெட் பரிசோதகரிடம் காட்டினால் போதும்.

பிளாட்பாரம் டிக்கெட்டையும் செல்போன் மூலம் எடுக்கலாம். சென்னையில் சென்ட்ரல், எழும்பூர், மாம்பலம், தாம்பரம், பெரம்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் இந்த வசதி தற்போது தொடங்கப்பட்டுள்ளது. 2 கி.மீ. தூரத்தில் வரும்போதே செல்போன் மூலம் பிளாட்பார டிக்கெட்டை பெற முடியும்.

பரிசோதகர்களிடம் எப்படி காண்பிப்பது?

சோதனைக்கு வரும் பரிசோதகர்களிடம் இதை எப்படி காண்பிப்பது என்பது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:

மின்சார ரயில் டிக்கெட், தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சீசன் டிக்கெட், பிளாட்பார டிக்கெட் ஆகியவற்றை செல்போன் மூலம் பெற முதலில் பதிவு செய்ய வேண்டும். இந்த டிக்கெட்டை மற்றவர்களுக்கு அனுப்ப இயலாது. ஒருமுறை பதிவு செய்த பின் மாற்றம் செய்ய இயலாது. பதிவு செய்த பிறகும் செல்போனில் இணையதள சேவை இருக்க வேண்டும். அப்போதுதான், டிக்கெட் பரிசோதகர் வரும்போது டிக்கெட்டை எடுத்துக் காட்ட முடியும். அப்ளிகேஷன் உள்ளே சென்று ‘ஷோ ஆப்ஷன்’ என்ற பட்டனை அழுத்தினால் பதிவு செய்த டிக்கெட்டை காணலாம். இதுதொடர்பாக முழுமையான தகவல்களை பெற www.sr.indianrailways.gov.in என்ற இணைதளத்தை பார்க்கலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT