அதிமுகவும்,பாமகவும் பாஜகவின் ’பி’ டீம்களாக செயல்பட்டு வருகின்றன என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.
திருவள்ளூர் தொகுதி திமுக வேட்பாளர் வி.ஜி.ராஜேந்திரனை ஆதரித்து நேற்று முன்தினம் இரவு திருவாலங்காடு பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட திருமாவளவன், பொதுமக்களிடையே பேசியதாவது:
பெரியார், அண்ணா, கருணாநிதியால் பண்படுத்தப்பட்ட தமிழகத்தை, மத வெறி, சாதி வெறிக் கட்சிகளுடன் கூட்டணி வைத்துக்கொண்டு, பிளவுபடுத்தும் செயலில் அதிமுக ஈடுபட்டுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி இறந்ததும், பொதுக்குழுவால் கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார் . ஆனால், ஜெயலலிதா இறப்புக்குப் பின், இதுவரை அதிமுகவுக்கு ஏன் பொதுச் செயலர் தேர்ந்தெடுக்கப்படவில்லை? கடந்த 5 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் எல்லா துறையிலும் ஊழல் நிறைந்துள்ளது.
இஸ்லாமியர்கள் மீது வெறுப்பை ஏற்படுத்தி, மதக் கலவரத்தைத் தூண்டும் வேலையைத்தான் நாடு முழுவதும் பாஜக, ஆர்எஸ்எஸ் ஆகியவை செய்து வருகின்றன.
அதிமுகவும், பாமகவும் பாஜகவின் ’பி’ டீம்களாக செயல்பட்டு வருகின்றன. தேர்தலுக்குப் பிறகு கே.பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் பாஜகவில் சேர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்த அளவுக்கு அதிமுகவும், பாமகவும் பாஜகவுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வருகின்றன.
பாஜக கூட்டணி ஒரு தொகுதியில் வெற்றி பெற்றால்கூட, அது தமிழகத்துக்கு பேராபத்தை விளைவிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.