தமிழக உரிமைகளை காக்க திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சைதாப்பேட்டையில் திமுக சார்பில் போட்டியிடும் மா.சுப்பிரமணியனை ஆதரித்து, அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று கங்கை அம்மன் கோயில் அருகில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
கடந்த சட்டப்பேரவை தேர்தலில், மா.சுப்பிரமணியன் 17 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். வரும் தேர்தலில் திமுக வெற்றி பெற்று, ஆட்சியை அமைக்கவுள்ளது. குறைந்தது 200 இடங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்.
செங்கல் மட்டுமே இருந்தது
மாநில அரசுக்குத் தர வேண்டிய ஜிஎஸ்டி வரித் தொகையை மத்திய அரசு இன்னும் வழங்கவில்லை. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வருவதாக சொன்னார்கள். சரி அங்கு என்னதான் இருக்கிறது என்று நான் உள்ளே சென்று பார்த்தால், செங்கல் மட்டுமே இருந்தது. அதிமுகவுக்கு அளிக்கும் வாக்கு, பாஜகவுக்கு அளிக்கும் வாக்காகும். பாஜகவும், அதிமுகவும் ஒன்றுதான்.
தமிழக உரிமைகளை முதல்வர் பழனிசாமி பறிகொடுத்து வருகிறார். நமது உரிமைகளை காக்க நம்மிடம் இருக்கும் ஒரே ஆயுதம் வாக்குதான். அதை உணர்ந்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். ஒவ்வொரு வாக்காளரும் மக்களிடம் இந்த பிரச்சாரத்தை கொண்டு சேர்க்க வேண்டும். இந்த தொகுதியில் போட்டியிடும் நல்ல வேட்பாளரை மிகப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். கடந்த தேர்தலில் மக்கள் ஆதரவு அளித்தது போல், வரும் சட்டப் பேரவை தேர்தலிலும் ஆதரவு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.