பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நேற்று 5 கோயில்களின் தீர்த்தவாரி கும்பகோணம் மகாமகம் குளம், காவிரி ஆற்றில் நடை பெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்.
கும்பகோணம் நாகேஸ்வர சுவாமி, ஆதிகம்பட்ட விஸ்வநாத சுவாமி, கொட்டையூர் கோடீஸ்வரர், திருபுவனம் கம்பஹரேஸ்வரர் கோயில்களில் கடந்த 19-ம் தேதி கொடியேற்றப்பட்டு, பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா தொடங்கியது. தொடர்ந்து, நேற்று முன்தினம் வரை காலை, மாலை நேரங்களில் பல்வேறு வாகனங்களில் சுவாமி, அம்பாள் சிறப்பு மலர் அலங்காரத்துடன் வீதியுலா புறப்பாடு நடைபெற்றது.
விழாவின் 10-வது நாளான நேற்று அதிகாலை கும்பகோணம் நாகேஸ்வர சுவாமி, ஆதிகம்பட்ட விஸ்வ நாத சுவாமி கோயில்களில் நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
பிரகன்நாயகியம்மன் சமேத நாகேஸ்வரர் மற்றும் அனந்தநிதியம்பிகையம்மன் சமேத ஆதிகம்பட்டவிஸ்வ நாதர் ஆகியோர் தனித்தனி வாகனங்களில் வீதியுலா சென்றனர். பின்னர், பகல் 12 மணியளவில் மகாமகம் குளக்கரையில் தீர்த்த வாரி மூர்த்தியான அஸ்திர தேவருக்கு அபிஷேகம், தீர்த்தவாரி நடைபெற்றது. அப்போது மகாமக குளத்தில் பக்தர்கள் புனித நீராடினர்.
இதேபோல, கொட்டை யூரில் உள்ள பந்தாடுநாயகி யம்மன் சமேத கோடீஸ்வரர் கோயில், திருபுவனத்திலுள்ள தர்ம சம்வர்த்தினி அம்மன் சமேத கம்பஹரேஸ்வரர் கோயிலின் தீர்த்தவாரி காவிரி ஆற்றில் நடைபெற்றது.
மேலும், ஆறுபடை வீடு களில் நான்காம் படை வீடான சுவாமிமலை முருகன் கோயி லில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நேற்று காலையில் வெள்ளி மயில் வாகனத்தில் வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமி வீதியுலா சென்று, காவிரியாற்றில் தீர்த்தவாரி நடைபெற்றது. அப்போது, ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். தொடர்ந்து ஏராளமானோர் காவடி, பால்குடம் எடுத்து வந்தனர். நேற்று இரவு வெள்ளி ரதத்தில் சுப்பிரமணியசுவாமி வள்ளி-தெய்வானையுடன் வீதியுலா நடைபெற்றது.
தெப்ப உற்சவம்
கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நேற்று சுவாமி- அம்பாள் புறப்பாடு நடை பெற்றது. பின்னர் மகாமக குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. அப்போது தெப்பத்தில் சுவாமி அம்பாள் எழுந்தருளி நான்கு கரையை யும் சுற்றி தெப்ப உற்சவம் கண்டருளினர்.