“கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் வெற்றிபெறச் செய்தால், நெய்யாறு இடதுகரை கால்வாயில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்பது தான் மக்களவையில் எனது முதல் குரலாக ஒலிக்கும்” என, விஜய்வசந்த் தெரிவித்தார்.
கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஜயகுமார் என்ற விஜய் வசந்த், விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜயதரணி ஆகியோர் விளவங்கோடு தொகுதிக்கு உட்பட்ட பாலவிளை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று வாக்கு சேகரித்தனர்.
அப்போது விஜய் வசந்த் பேசியதாவது:
அடிமை ஆட்சியிலிருந்து மக்களை மீட்டெடுக்க நடக்கும் இந்த தேர்தலில் காங்கிரஸ், திமுக கூட்டணி வெற்றிபெற வேண்டும். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வராக வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவதாக ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
இயற்கை எழில் கொஞ்சும் விளவங்கோடு தொகுதியில் ரப்பர் தொழிற்சாலை, ரப்பர் பூங்கா ஆகியவை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். நெய்யாறு இடதுகரை கால்வாயில் தண்ணீர் வராதது இங்கு நெடுநாள் பிரச்சினையாக உள்ளது. வெற்றி பெற்று மக்களவைக்கு செல்லும்போது, நெய்யாறு இடதுகரை கால்வாயில் கேரளாவில் இருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்பதே எனது முதல் குரலாக ஒலிக்கும். எனவே, கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் போட்டியிடும் எனக்கும், விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் விஜயதரணிக்கும் கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
விஜயதரணி பேசும் போது, “ கடந்த 10 ஆண்டு களாக விளவங்கோடு தொகுதி வளர்ச்சி க்காக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள் ளேன். எங்கள் கூட்டணியை வெற்றிபெறச் செய்யுங்கள்” என்றார்.
முன்னாள் எம்எல்ஏ லீமாறோஸ் உடனிருந்தார்.