தண்ணீர், மணல் கொள்ளை தமிழகத்தில்தான் அதிகம் நடக்கி றது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
அரியலூர் மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டி யிடும் அரியலூர் சுகுணாகுமார், ஜெயங்கொண்டம் நீல.மகாலிங்கம் ஆகியோரை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜெயங் கொண்டம் அண்ணாசிலை அருகே நேற்று முன்தினம் இரவு பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியது: தமிழகத்தில் ஆட்சியாளர்கள் மணல், தண்ணீர் அனைத்தையும் சந்தை பொருளாகவே கொள்ளை யடித்து விற்று வருகின்றனர். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் தண்ணீர், மணல் கொள்ளை அதிகமாக நடக்கிறது.
கல்வி மற்றும் மருத்துவ வளர்ச்சி தமிழகத்தில் இல்லை. விவசாயிகளால் வாழ முடிய வில்லை. விவசாயிகள் விளை விக்கும் பொருட்களுக்கு இடைத் தரகரே விலை நிர்ணயிக்கிறார். ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்களுக்கு அவர்களே விலையை நிர்ணயம் செய்கின்றனர்.
இந்த நிலை மாற அனைவரும் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றார்.
பின்னர், பெரம்பலூர் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மகேஸ்வரியை ஆதரித்து, பெரம்பலூர் காமராஜர் வளைவு பகுதியில் நேற்று சீமான் பேசியது:
இங்குள்ள அரசியல் கட்சி களுக்கு ஆள வேண்டும் என்கிற நோக்கம் மட்டுமே உள்ளது. மக்கள் வாழ வேண்டும் என்று யாரும் நினைக்கவில்லை. இந்தியாவை யார் விற்பது என்பதில் பாஜகவுக்கும், காங்கிரஸூக்கும் போட்டி நடக்கிறது என்று நான் 10 ஆண்டுகளுக்கு முன்பு சொன்ன போது யாரும் நம்பவில்லை. இப்போது தான் நம்புகின்றனர்.
மக்களுக்கான நலத்திட்டங்கள் என்னிடம் ஏராளமாக உள்ளன. ஒவ்வொரு நாளும் உங்களுக்காக இரவெல்லாம் தூங்காமல் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். எனவே அனைவரும் நாம் தமிழர் கட்சியை ஆதரிக்க வேண்டும் என்றார். தொடர்ந்து குன்னம் தொகுதி வேட்பாளர் ப.அருளுக்கு வாக்கு சேகரித்து லப்பைக்குடிகாட்டில் சீமான் பேசினார்.