தமிழ்நாட்டில் அமைந்த கூட்டணி போன்று இந்திய அளவில் கூட்டணி அமையவில்லை. அதனால் சகோதரர் ராகுல் அவர்களே, உங்களை அன்போடு கேட்கிறேன். நீங்கள் பொறுப்பு ஏற்றுக் கொள்ளுங்கள். உடனடியாக மத்தியில், இந்திய அளவில் இதுபோன்ற கூட்டணி அமைவதற்கு பொறுப்பேற்றுக் கொண்டு, அந்தப் பணிகளில் நீங்கள் இறங்கிட வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் வைத்தார்.
சேலத்தில் மதச்சார்பற்ற பிரச்சாரக் கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது:
''இங்கே இளம் தலைவர் ராகுல் வந்திருக்கிறார். அவரிடத்தில் ஒரு அன்பான வேண்டுகோள். அன்பான வேண்டுகோள் அல்ல, உரிமையான வேண்டுகோள்.
தொலைபேசியில் பேசும்போது சில நேரங்களில், சார்… சார்… என்று அவரிடம் பேசுவேன். அவர் உடனே மறுப்பார். ''இனிமேல் என்னை சார் என்று கூப்பிடக் கூடாது. 'பிரதர்' என்றுதான் கூப்பிட வேண்டும். ஒரு சகோதரனாக நினைத்துக் கொள்ள வேண்டும்'' என்று அடிக்கடி சொல்வார்.
எனவே, சகோதரர் ராகுல் அவர்களே… உங்களுக்கு ஒரு உரிமை கலந்த அன்பான வேண்டுகோள். இன்றைக்கு இந்தியா ஒரு மதவாத பாசிச கும்பலிடம் மாட்டி மூச்சுத் திணறிக் கொண்டிருக்கிறது. எனவே, இந்த இந்தியாவைக் காக்க வேண்டிய பெரும் கடமை உங்களுக்கு இருக்கிறது. தயவுசெய்து நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், அது நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தாலும் அல்லது இப்போது நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலாக இருந்தாலும், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி ஒன்று சேர்ந்துள்ளது. அவ்வாறு சேர்ந்த காரணத்தினால்தான் நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு தொகுதியில் கூட தமிழ்நாட்டில் பாஜக வெற்றி பெற முடியவில்லை என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது.
அதேபோல சட்டப்பேரவையில் நடைபெறவிருக்கும் தேர்தல் கருத்துக் கணிப்புகளில் எல்லாம் தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் பாஜக வாஷ் அவுட் என்ற நிலைதான். ஏற்கெனவே நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியில் இருக்கலாம். அதேநேரத்தில் அவர்கள் பெற்ற வாக்கு சதவீதம் 37 சதவீதம்தான். 37 சதவீதம் வாக்குகளைப் பெற்று பாஜக இன்றைக்கு ஆட்சியில் இருக்கிறது என்றால் 63 சதவீத மக்கள் அந்த பாஜகவை எதிர்த்து, பிரித்து வாக்களித்துள்ளார்கள். பல்வேறு கட்சிகளுக்குப் பிரித்துப் போட்டுவிட்டார்கள்.
தமிழ்நாட்டில் அமைந்த கூட்டணி போன்று இந்திய அளவில் கூட்டணி அமையவில்லை. அதனால் சகோதரர் ராகுல் அவர்களே, உங்களை அன்போடு கேட்கிறேன். நீங்கள் பொறுப்பு ஏற்றுக் கொள்ளுங்கள். உடனடியாக மத்தியில், இந்திய அளவில் இதுபோன்ற கூட்டணி அமைவதற்குப் பொறுப்பேற்றுக் கொண்டு, அந்தப் பணிகளில் நீங்கள் இறங்கிட வேண்டும்”.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.