சிவகங்கை தொகுதி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் குணசேகரன் பெண் வாக்காளர்களைக் கவர கிராமங்களில் திண்ணை பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார்.
சிவகங்கை அருகே ஒக்கூர், மதகுபட்டி, கருங்காலக்குடி, பிரவலூர் உள்ளிட்ட கிராமங்களில் குணசேகரன் இன்று திண்ணைப் பிரச்சாரத்தை மேற்கொண்டார். தனது கட்சியினர் மற்றும் கூட்டணிக் கட்சியினருடன் கிராமங்களில் வீடு வீடாகச் சென்று திண்ணையில் அமர்ந்து பெண்களிடம் கலந்துரையாடி வாக்குச் சேகரித்தார். அவர்கள் கூறும் குறைகளை அறிந்து நிவர்த்தி செய்வதாக வாக்குறுதி அளிக்கிறார்.
அப்போது அவரிடம் பேசிய பெண்கள், ‘100 நாள் வேலைத் திட்டத்தை 150 நாட்களாக உயர்த்த வேண்டும். கூலியை உயர்த்தி, உடனுக்குடன் வழங்க வேண்டும்,’ எனக் கேட்டு கொண்டனர். இதையடுத்து குணசேகரன் பேசுகையில், ‘‘நான் வெற்றி பெற்றால் உங்களது கோரிக்கை நிறைவேற்றப்படும்’’ என்று கூறினார்.
மேலும், இப்பகுதியில் பெண்களுக்கு நிரந்தரமாக வேலைவாய்ப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குணசேகரன் உறுதியளித்தார்.