தமிழகம்

புதுச்சேரியில் பி.எச்.டி வரை இலவசக் கல்வி; குடும்பத் தலைவிக்கு 1,000 ரூபாய் உதவித்தொகை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் சிறப்பம்சங்கள்

செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரியில் குடும்பத் தலைவிக்கு மாதம்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையைக் கட்சித் தலைமை அலுவலகத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி மற்றும் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, எம்.பி. வைத்திலிங்கம் மற்றும் நிர்வாகிகள் காங்கிரஸ் அலுவலகத்தில் இன்று கூட்டாக வெளியிட்டனர்.

காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையின் சிறப்பம்சங்கள்:

* புதுச்சேரிக்கு முழுமையான மாநில அந்தஸ்து பெறப்படும்.
* புதுச்சேரி அரசு மத்திய அரசிடம் பெற்ற அனைத்துக் கடன்களையும் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
* புதுச்சேரியை 15-வது நிதி கமிஷனில் சேர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
* ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மீனவர் உட்பட அனைத்துத் தரப்பு மாணவர்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை படிப்படியாக இலவசமாக வழங்கப்படும்.
* நீட் தேர்வை ரத்து செய்ய முழுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
* புதுச்சேரியில் சட்டப் பல்கலைக்கழகம் நிறுவப்படும்.
* மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை 2020 புதுச்சேரி ஏற்றுக்கொள்ளாது என்று அறிவிக்கப்படும்.
* புதுச்சேரிக்கு ஒரு தனிக் கல்வி வாரியம் அமைக்கப்படும்.
* புதுச்சேரி மின்துறையைத் தனியார் மயமாக்கும் திட்டத்தை முழுமையாக எதிர்த்து மின்துறை அரசுத் துறையாக தொடர நடவடிக்கை எடுக்கப்படும். மின்துறை தனியார் மயமாக்கப்பட மாட்டாது.

* அனைத்து சுகாதார மையங்களிலும் பகல் முழுவதும் மற்றும் இரவு 10 மணி வரையிலும் மருத்துவர்கள் நியமிக்கப்பட்டு தொடர்ந்து மருத்துவ வசதி வழங்கப்படும்.

* ஆயுஷ்மான் மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் தற்போது சிவப்பு அட்டைதாரர்களுக்கு ரூ.5 லட்சம் வரை வழங்கி வருகிறது. புதுச்சேரி மாநில மக்கள் அனைவருக்கும் மருத்துவக் காப்புறுதி திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

* கரோனா போன்ற தொற்று வியாதிகளுக்கென்று தனி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள்
நிறுவப்படும்.
* மாநில மருத்துவப் பல்கலைக்கழகம் புதுச்சேரியில் உருவாக்கப்படும்.
* புதுச்சேரியில் உள்ள அனைத்து மக்களுக்கும் கரோனா தடுப்பூசி எந்தவிதக் கட்டணமுமின்றி,
இலவசமாகப் போடப்படும். இதற்கான செலவுத் தொகையை அரசே முழுமையாக ஏற்கும்.

* காரைக்காலில் விவசாயப் பல்கலைக்கழகம் உருவாக்கப்படும்.

* விவசாய விரோத மூன்று வேளாண் சட்டங்கள் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
* மண்டல் கமிஷன் பரிந்துரையின்படி, கடற்கரை மற்றும் உள்நாட்டு மீனவர்களை பழங்குடியினர்
பட்டியலில் சேர்க்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.
* 2019ஆம் ஆண்டின் இந்திய கடல் மீன் வளம் (ஒழுங்குப்படுத்தல் மற்றும் மேலாண்மை)
சட்டத்திற்கு எதிர்ப்புகள் இருப்பதால் முழுமையாக அந்தச் சட்டத்தை நீக்குவதற்காக
மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.
* புதுச்சேரியில் உள்ள அனைவருடைய வாழ்வாதாரத்தையும் உறுதிப்படுத்தும், விதத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
* அனைத்து மகளிருக்கும் ஆண்டுக்கு ஒரு முறை இலவச மருத்துவப் பரிசோதனை செய்யப்படும்.


* ஒவ்வொரு குடும்பத் தலைவிக்கும் மாதாமாதம் ரூ.1000/- வழங்கப்படும்.
* புதிதாக வீடு கட்டும், வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள பயனாளிகளுக்கு வீடு கட்டும் மானியம்
2 லட்சத்தில் இருந்து 3 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.
* புதுச்சேரியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா மற்றும் பின்னலாடைப் பூங்கா உருவாக்கப்படும்.
* அமைச்சரவை முடிவுக்கு எதிர்ப்பாக மத்தியில் ஆளும் பாஜக அரசால் மூடப்பட்ட AFT மில் சுதேசி மில், பாரதி மில் போன்றவைகள் மறுசீரமைத்து, திறக்கப்படும்.

* லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* புதுச்சேரியில் தொழில் முனைவோர்களை ஈர்க்க புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும்.
* அனைத்து வீடுகளுக்கும் கட்டணமில்லாக் குடிநீர் இணைப்பு வழங்கப்படும்.
* நகரின் போக்குவரத்து நெரிசலை நீக்க அடுக்குமாடி வாகன நிறுத்தும் வசதி செய்து தரப்படும்.
* புதுச்சேரி நகரம் முழுவதும் கண்காணிப்பு கேமரா நிறுவப்பட்டு அனைவரின் பாதுகாப்பும்
உறுதி செய்யப்படும்.
* முதியோர், விதவைகள், கணவனால் கைவிடப்பட்டவர்களுக்கு ஓய்வூதியம், தற்போது வழங்கும் தொகையை விட ரூ.5000ஆகப் படிப்படியாக உயர்த்தி வழங்கப்படும்.


* 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு சுற்றுலாத்துறை மூலம் இந்தியாவில் உள்ள அனைத்து மதங்களுக்குமான முக்கிய ஆன்மிகத் தலங்களுக்கு சுற்றுலா மேற்கொள்ள 50%
பயணக் கட்டணத்தில் ஏற்பாடு செய்யப்படும்.

* மத்திய பாஜக அரசால் மூடப்பட்ட ரேஷன் கடைகளைத் திறந்து, ஆண்டு முழுவதும் அரிசி, பருப்பு, சர்க்கரை, சமையல் எண்ணெய் போன்ற பொருட்கள் வழங்கப்படும்.
* புதுச்சேரி அரசு ஊழியர்கள் பணிக்கு தேர்வாணையம் அமைக்கப்படும்.
* தனியார் மருத்துவ பொறியியல் மற்றும் இதர தொழில்நுட்பக் கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை அரசுக்கு சென்டாக் மூலம் நிரப்பிட நடவடிக்கை எடுக்கப்படும்.
* புதுச்சேரி மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் துறைகளின் 3 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள்
வழங்கப்படும்.
* அனைத்து நகராட்சிகளுக்கும் அனைத்து கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கும் உள்ளாட்சித் தேர்தல் உடனடியாக நடத்தப்படும்.
* மத்திய கப்பல் போக்குவரத்துத் துறையின் மூலம் காரைக்கால் துறை முகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறை வரை பயணிக்கும் திட்டம் தொடங்கப்படும்.
*பிற்படுத்தப்பட்டோர் கார்ப்பரேஷன் மூலம் அவர்கள் வாங்கிய கடன் முழுவதும் ரத்து செய்யப்படும்.
* பொதுமக்களின் குறைகளைத் தீர்ப்பதற்காக மூன்று மாதத்திற்கும் ஒருமுறை குறை தீர்க்கும்
முகாம் நடத்தப்படும்.

இவ்வாறு காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT