முதல்வர் பழனிசாமி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அதிமுக சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ஆ.ராசா மீது சென்னை போலீஸார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
திமுக தலைவர் ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருவரின் அரசியல் வளர்ச்சியைக் குறிப்பிட்டு ஆ.ராசா பேசிய பேச்சு சர்ச்சையைக் கிளப்பியது. முதல்வரின் பிறப்பு குறித்து அதில் ஒப்பீடு என்பதாகப் பேசியது பலத்த கண்டனத்தை ஏற்படுத்தி வருகிறது. சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ஆ.ராசாவின் சர்ச்சைக்குரிய பேச்சை பாமக நிறுவனர் ராமதாஸும் கண்டித்தார். மேலும், தேர்தல் நேரத்தில் முதல்வரைத் தனிப்பட்ட முறையில் திமுக தலைவர்கள் தாக்கிப் பேசுவதாகவும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆ.ராசா, லியோனி இருவரது பேச்சும் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், திமுக கண்ணியக் குறைவாகப் பேசுவதை அனுமதிக்காது, மற்றவர்கள் நமது வார்த்தையை எடுத்து விமர்சிக்கும் வகையில் திமுகவினர் பேச்சு மூலம் இடம் தரக்கூடாது என ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார்.
தனது பேச்சுக்குக் கண்டனம் வலுத்து வரும் வேளையில் ஆ.ராசா தன்னிலை விளக்கம் அளித்திருந்தார். அதில், “நான் எடப்பாடி பழனிசாமியின் தனிப்பட்ட பிறப்பையோ, அவருடைய தனிப்பட்ட புகழுக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலோ பேச வேண்டிய எண்ணமில்லை. எடப்பாடி பழனிசாமி குறுக்கு வழியில் வந்தவர் என்பதற்காக அப்படி ஒரு ஒப்பீடு செய்யப்பட்டது. அதை ஒட்டியும், வெட்டியும் சமூக வலைதளங்களில் பரப்பிக் கொண்டிருப்பதாக அறிகிறேன். அதைத் தவறாகப் புரிந்துகொண்டால் அதற்கு நான் பொறுப்பேற்க முடியாது” என்று தெரிவித்தார்.
இந்நிலையில், ஆ.ராசாவின் பேச்சு குறித்து நடவடிக்கை எடுக்க அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
அந்தப் புகாரின் பேரில் ஆ.ராசா மீது 294 (பி) அவதூறாகப் பேசுதல், 153 ( இரு சமூகங்களுக்கு இடையே மோதல் ஏற்படும் வகையில் பேசுதல்), தேர்தல் நடத்தை விதியை மீறுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் சென்னை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.