தமிழகம்

தமிழகம் வந்தார் ராகுல்: சேலத்தில் ஸ்டாலினுடன் இணைந்து பிரம்மாண்டப் பொதுக்கூட்டத்தில் பேச்சு

செய்திப்பிரிவு

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் பிரச்சாரத்துக்காக தமிழகம் வந்தார். காலையில் வேளச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்த அவர் இன்று மாலை சேலம் உளுந்தூர்பேட்டை சாலையில் நடக்கும் பிரம்மாண்டப் பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களுடன் பிரச்சாரம் செய்கிறார்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்.6 அன்று நடக்கிறது. இதில் திமுக தலைமையில் காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள், விசிக, முஸ்லிம் லீக், மமக, கொமதேக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து போட்டியிடுகின்றன. அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் இணைந்து போட்டியிடுகின்றன. மநீம, அமமுக கட்சிகளும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. நாம் தமிழர் கட்சி மட்டும் தனித்துக் களம் காண்கிறது.

இந்தத் தேர்தலில் ஆரம்பத்திலிருந்தே திமுகவுக்கு ஆதரவான நிலை உள்ளது என்கிற கருத்து எழுந்தது. தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னரே தலைவர்கள் பிரச்சாரத்தைத் தொடங்கினர். ராகுல் காந்தி மூன்று முறை தமிழகத்திற்கு வந்து பிரச்சாரம் செய்தார். பொதுமக்களுடன் நேரடியாக உரையாடல் மூலம் பிரச்சாரம் மேற்கொண்டார். இவையெல்லாம் பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றது.

அதேபோல் திமுகவில் ஸ்டாலின் தூதுவர்கள் என உதயநிதி, கனிமொழி, ஆ.ராசா, திருச்சி சிவா, தமிழச்சி தங்கபாண்டியன், பொன்முடி, சுப்புலட்சுமி ஜெகதீசன் உள்ளிட்ட 15 பேர் நவம்பர் மாதமே பிரச்சாரத்தைத் தொடங்கினர். 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' நிகழ்ச்சி மூலம் 187 தொகுதிகளுக்கும் மேல் ஸ்டாலின் பிரச்சாரத்தை முடித்தார்.

மறுபுறம் அதிமுக தரப்பில் ஒற்றை ஆளாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் பல தொகுதிகளில் பிரச்சாரம் செய்தார். மத்தியிலிருந்து பாஜக தலைவர்கள் பிரதமர் மோடி, நட்டா, அமித் ஷா எனப் பலரும் தமிழகத்துக்கு வந்து நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டபின் திருச்சியில் மார்ச் 7-ம் தேதி அன்று திமுக பிரம்மாண்டப் பொதுக்கூட்டம் நடத்தியது. இந்நிலையில் இன்று சேலத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் பிரம்மாண்டப் பொதுக்கூட்டம் நடப்பதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தக் கூட்டத்தில் ஸ்டாலினும், ராகுலும் ஒரே மேடையில் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளனர். தேர்தல் பிரச்சாரம் செய்யத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் முதல் முறையாக ராகுல் இன்று தமிழகம் வந்தார்.

காலை 11 மணிக்கு விமானம் மூலம் சென்னை வந்த அவர் சென்னை வேளச்சேரி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஹசன் மவுலானாவுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்தார். இதற்காக அடையாறு, சாஸ்திரி நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அவருடன் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், சைதாப்பேட்டை வேட்பாளர் மா.சுப்ரமணியம், செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் ஹெலிகாப்டர் மூலம் சேலம் செல்லும் அவர் மாலையில் உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலை, சீலநாயக்கன்பட்டியில் நடக்கும் பிரம்மாண்டப் பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் உள்ளிட்டவர்களோடு சேர்ந்து பிரச்சாரம் செய்யவுள்ளார்.

இந்தப் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், ராகுல் காந்தி, கி.வீரமணி, கே.எஸ்.அழகிரி, வைகோ, கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன், கே.எம்.காதர் மொகிதீன், ஜவாஹிருல்லா, வேல்முருகன், ஈஸ்வரன், பி.வி.கதிரவன் உள்ளிட்டோர் பேசுகின்றனர்.

SCROLL FOR NEXT