சட்டப்பேரவை தேர்தலில் 100 சதவீத வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இதேபோல், விருப்பமுள்ள சில அமைப்புகளும் தேர்தலில் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு, கலை நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன.
அந்த வகையில், வரும் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்போம், எனது வாக்கு விற்பனைக்கு அல்ல என்பதை வலியுறுத்தி சுதந்திர வாடகை வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் தனது விழிப்புணர்வு பிரச்சாரத்தை நேற்று புழல் பகுதியில் தொடங்கியது. இந்த நிகழ்வின்போது ஓட்டுநர்கள், பொதுமக்கள் என 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர் .
இது தொடர்பாக சுதந்திர வாடகை வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சங்க பொதுச்செயலாளர் ஜூட் மேத்யூ கூறியதாவது: தமிழ்நாடு, புதுச்சேரியில் விரைவில் நடக்கவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்கவும், ஓட்டுக்கும் பணம் வாங்காமல் நேர்மையாக வாக்களிக்க கோரியும் நாங்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடந்தவுள்ளோம்.
முதல்நாளில் புழல், மாதவரம், செங்குன்றம், பெரம்பூர், மூலக்கடை, கொளத்தூர் பகுதியில் இருக்கும் ஆட்டோ, கால்டாக்சி, கனரக வாகனங்கள் நிறுத்தம், சரக்கு வாகனங்கள் புக்கிங் என அனைத்து வகை வாகனங்களின் நிறுத்தங்களில் நடந்த நிகழ்வில் ஓட்டுநர்கள், பொதுமக்கள் பங்கேற்று ஆதரவு தெரிவித்தும், புகைப்படங்களை எடுத்து கொள்கின்றனர்.
குறிப்பாக, வாகன ஓட்டுநர்கள் தங்களது தொழிலை மட்டும் பார்க்காமல் தேர்தல் அன்று ஜனநாயக கடமை ஆற்றுவோம் என்ற உறுதியை எடுத்துக் கொள்கின்றனர். அதேபோல், அடுத்து, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும் இதேபோல், தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தவுஉள்ளோம். அதேபோல், எங்களது சங்கத்தின் பேஸ்புக் பக்கத்திலும் வாக்களிப்பதன் அவசியம் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.