தமிழகம்

பக்திக்களி பரப்பிய பித்துக்குளி

வா.ரவிக்குமார்

நாடறியும் நூறுமலை நானறிவேன் சுவாமிமலை… கந்தன் எனும் மந்திரத்தை… ஆர்மோனியத்தோடு இரண் டறக் கலந்து ஒலிக்கும் அந்தக் குரலில் நம்முடைய துன்பம் எல்லாம் கரைந்துபோகும். அத்தகைய தெய்வீக கானத்தை தம்முடைய 7 வயதிலிருந்து 90 வயதுவரை ஒலித்தவர் பித்துக்குளி முருகதாஸ்.

நாடறிந்த முருக பக்தரான பித்துக்குளி முருகதாஸ் (வயது 95) நேற்று சென்னை ராயப்பேட்டையில், அவருடைய மனைவி தேவி சரோஜாவின் சகோதரி மாதங்கி, பத்மநாபன் தம்பதியின் இல்லத்தில் உடல்நலக் குறைவால் மரணமடைந்தார். இவரது இயற்பெயர் பாலசுப்ரமணியன்.

கோயம்புத்தூரில் 1920-ல் சுந்தரம் அய்யர், அலமேலு தம்பதிக்கு ஜனவரி 25 தைப்பூசம் அன்று மகனாகப் பிறந்தார். சிறுவயதிலேயே பக்தி மார்க்கத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார். தன் வயதில் இருக்கும் சிறுவர்களைப்போல் அல்லாமல் இறைவனைக் குறித்த சிந்தனையும் தேடலும் அவரை, பள்ளிப்படிப்பை 7-ம் வகுப்போடு நிறுத்தியது. இறை அனுபவத்தைத் தேடி கோயம்புத்தூரில் ரயில் ஏறிய பால சுப்ரமணியன், பயணச்சீட்டு இல்லாததால் ஈரோட்டிலேயே இறக்கிவிடப்பட்டார்.

பித்துக்குளியான பாலசுப்ரமணியன்

அங்கேயே சிறுசிறு வேலைகளைச் செய்துவந்தார். சிறிது காசு சேர்ந்தவுடன் ஈரோடுக்கு அடுத்த ஊருக்கு வந்து சேர்ந்தார். அங்குதான் பிரம்மானந்த பரதேசியாரின் குரு கடாட்சம் அவருக்குக் கிடைத்தது. வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகள், ஞானானந்த கிரி, சுவாமி ராமதாஸ், மாதா கிருஷ்ணா பாய் ஆகிய அருளாளர்களின் ஆசியும் பாலசுப்ரமணியனுக்குக் கிடைத்தது. வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகள், பாலசுப்ரமணியனுக்கு திருப்புகழ் சொல்லிக் கொடுத்தார்.

பிரம்மானந்த பரதேசியார் பாலசுப்ரமணி யனை பித்துக்குளி என்றே அழைப்பார். “நீயும் என்னை மாதிரி பித்துக்குளியாகப் போகிறாய்” என்பாராம் பிரம்மானந்த பரதேசியார். அதிலிருந்தே பாலசுப்ரமணியன், பித்துக்குளி முருகதாஸ் ஆனார்.

தேசப்பற்றை வளர்க்க படித் திருவிழா

ஆங்கிலேய ஆதிக்கத்தில் நாடு இருந்த காலத்தில் ஜனவரி 1-ம் தேதியன்று ஆங்கிலேய பிரபுக்களை நாட்டு மக்கள் சந்திக்கும் வழக்கம் இருந்தது. சுதந்திர வேள்வியின் உப்பு சத்தியாக்கிரகம், அந்நிய துணி பகிஷ்கரிப்பு போன்ற போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டவர் பித்துக்குளி முருக தாஸ். பக்தி மார்க்கத்தின் வழியாக ஆங்கி லேய பிரபுக்களை மக்கள் சந்திக்கும் வழக் கத்தை திசை திருப்பும் வகையில் திருத்தணி, மருதமலை, பழநி போன்ற கோயில்களில் திருப்படி திருவிழாவை பிரபலமாக்கிய பெருமை பித்துக்குளி முருகதாஸையே சேரும். 38 ஆண்டுகளாக தொடர்ந்து மருதமலை திருப்படிக்கட்டு திருவிழாவில் பங்கெடுத்தார் பித்துக்குளி முருகதாஸ்.

மண்டேலாவிடம் கிடைத்த பாராட்டு

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, மராட்டி உட்பட ஏழு இந்திய மொழி கள் பித்துக்குளி முருகதாஸுக்குத் தெரியும். நாமசங்கீர்த்தனத்தின் பெருமையை உலகறியச் செய்தவர் பித்துக்குளி முருக தாஸ். ரமண மகரிஷி, காஞ்சி மகா பெரிய வர் ஆகிய மகான்களின் அருளும் அவருக் குக் கிடைத்தது. பக்தி மெல்லிசையை இந்தி யாவிலும் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, சீசெல்ஸ், மொரீஷியஸ், லண்டன், தென்னாப்பிரிக்கா போன்ற உலகின் பல நாடுகளிலும் பரப்பியவர் பித்துக்குளி முருகதாஸ்.

‘‘என்னைவிட உங்களுக்கு இங்கே ஆதரவு அதிகம் இருக்கிறது’’ என நெல்சன் மண்டேலா, பித்துக்குளி முருக தாஸைப் பாராட்டியிருக்கிறார். தென்னாப் பிரிக்காவில் கல்வி அறக்கட்டளையையும் வாலாஜாபேட்டையில் தீனபந்து ஆஸ்ரமத் தையும் நிறுவி சேவை செய்துள்ளார். வந்தி ருப்பவர்களுக்கு அன்ன தானம் செய்ய வேண்டும் என்பதை மட்டுமே கோரிக்கையாக வைத்து பெரும்பாலான நிகழ்ச்சிகளை இலவசமாக நடத்திய பெருமைக்கு உரியவர் இவர்.

தன்னுடைய குருவைப் பற்றியும், தேவி கருமாரி, முருகன், கிருஷ்ணன் ஆகி யோரைப் பற்றி அனேக பாடல்களை எழுதிப் பாடியிருக்கும் பித்துக்குளி முருகதாஸ், கந்தர் அனுபூதி அனுபவ விரிவுரை, தாசனின் கட்டுரைகள் போன்ற நூல்களையும் எழுதியிருக்கிறார்.

தீவிர முருகபக்தரான முருகதாஸ் பல்வேறு தெய்வீக பாடல்களை பாடியிருப்பதுடன், ‘தெய்வம்’ திரைப்படத்தில் ‘நாடறியும் நூறு மலை…’ பாடல் காட்சியில் நடித்துள்ளார். தென்னாப்பிரிக்கா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளிலும் இசைக் கச்சேரிகளை நடத்தியுள்ளார்.

நேபாள நாட்டின் கவுரவம்

சுவாமி சிவானந்தரால் வழங்கப்பட்ட சங்கீர்த்தன சாம்ராட், சங்கீத நாடக அகாடமி விருது, தியாகராஜர் விருது, கலைமாமணி விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்றிருப் பவர். இரண்டுமுறை இந்தியா முழுவதும் பாதயாத்திரை சென்றுவந்தவர் பித்துக்குளி முருகதாஸ். அப்படியொருமுறை நேபாளத் துக்குச் சென்ற இவரை, அவரின் பக்தி இசையின் பெருமையை உணர்ந்து நேபாள நாட்டின் ராணி கவுரவித்திருக்கிறார்.

ரசிகர்களையும் பாடகர்களாக்கியவர்

எத்தனையோ சங்கீதச் சக்கரவர்த்திகள் இந்த மண்ணில் இருந்தாலும் கேட்பவர்களை யும் தம்மோடு பாடவைத்து ரசித்த பெரு மைக்குரியவர் பித்துக்குளி முருகதாஸ். பச்சைமயில் வாகனனே… என்று அவர் தொடங்கிவைத்த பஜனை கோஷம் என்றைக்கும் அவரின் இருப்பைச் சொல்லும். இனிமையான குரல்கள் எல்லாவற்றையும் சேர்த்தால் கிடைக்கும் ஒரு குரலின் இனி மைக்கு உரியவர் பித்துக்குளி முருகதாஸ் என்று புகழ்பெற்ற இசை விமர்சகர் சுப்புடுவால் பாராட்டப்பட்டவர் பித்துக்குளி முருகதாஸ்.

தைப்பூசத்தில் ஜனனம் கந்த சஷ்டியில் மரணம்

சச்சிதானந்த குரு, ஆடாது அசங்காது வா கண்ணா, ஜெய ஜெய சக்தி ஓம் ஜெய ஜெய சக்தி, அலைபாயுதே கண்ணா போன்ற பல பாடல்கள் இவர் பாடிப் பிரபலப்படுத்தியவை. தைப்பூசத்தன்று பிறந்து, கந்த சஷ்டி அன்று இறைவனடி சேர்ந்துவிட்டார் பித்துக்குளி முருகதாஸ்!

SCROLL FOR NEXT