தமிழகம்

அனைவருக்கும் சமமான சமூக நீதி கிடைக்க வேண்டும்: சமுதாய தலைவர்களுடன் சந்திப்பில் கமல்ஹாசன் கருத்து

செய்திப்பிரிவு

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று மதியம் செல்வபுரம் அசோக்நகரில் உள்ள விஸ்வகர்மா சங்கத்தினரையும், ராஜஸ்தான் சங்கத்தில் வடமாநில மக்களையும் சந்தித்தார். பின்னர், டவுன்ஹாலில் உள்ள கத்தோலிக்க பிஷப் இல்லத்துக்குச் சென்ற கமல்ஹாசன், பிஷப் தாமஸ் அக்குவினாஸையும், உக்கடத்தில் இஸ்லாமிய ஜமாத் தலைவர்களையும் சந்தித்து ஆதரவு திரட்டினார். தொடர்ந்து, பூ மார்க்கெட் அருகே கட்சி அலுவலகத்தை திறந்துவைத்து, மரக்கடை, காட்டூர், சித்தாபுதூர் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

விஸ்வகர்மா சங்கத்தினருடன் நடந்த சந்திப்பின் போது கமல்ஹாசன் பேசியதாவது: தென் மாவட்டத்தில் இருந்து புலம் பெயர்ந்து வந்த இவர்கள், என் உறவினர் என்றால் மிகையாகாது. கடமையைச் செய்வதற்காக புலம் பெயர்ந்தவர்கள். நானும் அப்படித்தான். ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்ற கணியன் பூங்குன்றனாரின் வார்த்தைகளுக்கு உதாரணமாக திகழ்வது இந்த சங்கமும், நானும். தமிழகத்தை சீரமைக்க வேண்டும் என்பது தான் என் ஆசை. அது உங்கள் சங்கத்தாரை, உங்களை தவிர்த்து விட்டு செய்ய முடியாது.

ஒட்டுமொத்த சாதி வாரி கணக்கெடுப்பை எடுக்காமல், 10 சதவீதம் ஒதுக்கீடு என்று சொல்வது, வங்கியில் பணம் இல்லாதபோது, அளிக்கும் காசோலை போன்றது. சாதி வேண்டாம் என நினைப்பவன் நான். இருப்பினும், சாதி வாரி கணக்கெடுப்பு செய்து, அனைவருக்கும் சமமான சமூக நீதி கிடைக்க வேண்டும் என்று நினைப்பவன். அரசாங்க வேலை என்பது ஒரு விழுக்காடு தான். அது அனைவருக்கும் போய் சேராது. ஆனால், வேலை தேடி படித்துவிட்டு அலையும் இளைஞர்களுக்கு நான் ஒரு நல்ல வழி சொல்வேன்.

வேலை தேடி அலையும் தொழிலாளர்களாக இல்லாமல், மற்றவர்களுக்கு வேலை கொடுக்கும் முதலாளிகளாக நீங்கள் மாற வேண்டும். அதற்கான திறன் மேம்பாட்டு மையங்களை, மக்கள் நீதி மய்யம் ஒவ்வொரு தொகுதியிலும் அமைக்கும். எனது குருமார்கள் எனக்கு திறன் மேம்படும் வழியை சொல்லிக் கொடுத்தனர். தற்போது நான் கோடி கோடியாக வரி கட்டுகிறேன். 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலை கொடுக்கும் முயற்சியில் வெல்லப்போகிறோம். சாதி, மதம் பார்க்காமல், மக்கள் நலன் மட்டுமே மனதில் கொண்டு செயல்படும் ஒரே கட்சி மநீம. அதற்கு நீங்கள் ஆதரவளித்து வலு சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT