ரூ.10 லட்சம் கடனை திருப்பிக் கொடுக்காததால் இளைஞரை கடத்திய வழக்கில் ஞாயிற்றுக்கிழமை மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள 2 பேரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சென்னை வேப்பேரி நாயர் பாலத்தில் கடந்த 24-ம் தேதி இரவு போலீஸார் வாகன சோதனை நடத்தினர். அப்போது வேகமாக வந்த ஒரு காரை வேப்பேரி காவல் நிலைய தலைமைக் காவலர் தர்மராஜ், ஊர்க்காவல் படை காவலர் விக்னேஷ் ஆகியோர் நிறுத்தினர். அப்போது காரில் இருந்த 4 பேர் திடீரென கதவை திறந்து கொண்டு தப்பி ஓடினர். போலீஸார் காருக்குள் பார்த்தபோது இளைஞர் ஒருவர் காயங்களுடன் இருந்தார். விசாரணையில் அவரது பெயர் முகமது ஜாவித் (32) என்பதும், திருவல்லிக்கேணி ஜாம்பஜார் தேவராஜ் தெருவை சேர்ந்தவர் என்பதும் தெரிந்தது.
சம்பவம் குறித்து போலீஸார் கூறியதாவது:
பாரிமுனையில் மூர்ஸ் தெருவில் வசித்து வரும் தன்வீர் (25) என்பவருடன் சேர்ந்து எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்பனை செய்யும் தொழிலை முகமது ஜாவித் செய்து வருகிறார். இந்த பழக்கத்தை பயன்படுத்தி தன்வீரிடம் இருந்து ரூ.10 லட்சம் கடன் வாங்கியிருக்கிறார். கொடுத்த கடனை ஜாவித் திருப்பித் தராததால் ஆத்திரம் அடைந்த தன்வீர் கூலிக்கு ஆட்களை அனுப்பி முகமது ஜாவித்தை கடத்தி பணம் பறிக்க திட்டமிட்டிருக்கிறார்.
அவரது ஏற்பாட்டின்படி கூலிப்படையைச் சேர்ந்த 4 பேர், கடந்த 24-ம் தேதி இரவில் ஆயிரம்விளக்கு நவாஸ்கான் தெருவில் உள்ள ஒரு கடையில் நண்பர்களுடன் ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்த முகமது ஜாவித்தை வலுக்கட்டாயமாக காருக்குள் ஏற்றி அடித்து உதைத் துள்ளனர். போலீஸார் திடீரென வாகன சோதனை நடத்தியதால் காரையும், முகமது ஜாவித்தையும் விட்டுவிட்டு 4 பேரும் தப்பிச் சென்றுவிட்டனர். தன்வீரையும், அவர் அனுப்பிய கூலிப்படையை சேர்ந்த 4 பேரையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படையினர் விசாரணை நடத்தி தன்வீரை 28-ம் தேதி கைது செய்தனர். பின்னர் கடத்தலுக்கு திட்டம் வகுத்துக் கொடுத்ததாக தன்வீரின் மனைவி நஜ்ஜாவையும் கைது செய்தனர். இவர்களிடம் விசாரணை நடத்தியதில், சையது இர்பான், உதயா, சுரேஷ், சதீஷ் ஆகியோர் கடத்தல் திட்டத்தை அரங்கேற்றியது தெரிந்தது.
இவர்களில் சையது இர்பான், உதயா ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள சுரேஷ், சதீஷை தீவிரமாக தேடி வருகிறார்கள்.