பாமக வேட்பாளரை ஆதரித்து, சேலம் சூரமங்கலம் உழவர் சந்தை அருகே திரண்டிருந்த மக்கள் மத்தியில் அக்கட்சியின் இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசினார். படம்: எஸ். குரு பிரசாத் 
தமிழகம்

பெண்ணுரிமை பற்றி திமுக பேசுவது நாடகமா? - சேலத்தில் அன்புமணி ராமதாஸ் விமர்சனம்

செய்திப்பிரிவு

திமுக-வினர் பெண்ணுரிமை பற்றி பேசுவது நாடகமா? வசனமா? என சேலத்தில் பாமக இளைஞரணி மாநிலத் தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

சேலம் சூரமங்கலம், அஸ்தம்பட்டி உள்ளிட்ட இடங்களில் அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் சேலம் மேற்கு தொகுதி அருள் (பாமக), சேலம் வடக்கு வெங்கடாஜலம் (அதிமுக) உள்ளிட்டோரை ஆதரித்து பாமக இளை ஞரணி மாநிலத் தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:

தமிழகத்தில் 70 ஆண்டுகளுக்குப் பின்னர் விவசாயி ஒருவர் முதல்வராகியுள்ளார். அந்த விவசாயி மீண்டும் தமிழக முதல்வராக வர வேண்டும். வளர்ச்சித் திட்டங்கள் மீண்டும் தொடர வேண்டும். நெற்றி வியர்வை சிந்துபவர்களைக் கொண்ட விவசாயி தலைமையிலான நமது கூட்டணி.

மறுபக்கம் ஏசி அறையில் உட்கார்ந்து இருக்கும் ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி. திமுக கொள்கை பரப்புச் செயலாளர்ஆ.ராசா, பெண்களை கொச்சைப் படுத்தி பேசியிருக்கிறார். திமுக-வினர் பெண்ணுரிமை பற்றி பேசுவது நாடகமா? வசனமா? ஸ்டாலினுக்கு இருக்கும் ஒரே தகுதி அவர் கருணாநிதியின் மகன் என்பது தான்.

பெண்களுக்கு பாதுகாப்பானது அதிமுக ஆட்சி. சட்டம் ஒழுங்கு நன்றாக உள்ளது. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்தால், மீண்டும் நில அபகரிப்பு உள்ளிட்ட பல பிரச்சினைகள் ஏற்படும்.

திமுக-வை மக்கள் ஒதுக்கிவிட்டனர். அதனால் தான் ஆ.ராசா போன்றவர்கள் தோல்வி பயத்தில் உளறுகின்றனர். தேர்தலில், அதிமுக கூட்டணி மீண்டும் வெற்றி பெறுவது உறுதி.

இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT