சென்னை வடபழனி முருகன் கோயிலில் 80 சதவீத திருப்பணிகள் நிறைவடைந்துள்ளன. வரும் ஜூன் மாதத்துக்குள் கும்பாபிஷேகம் நடத்த இந்து சமய அறநிலையத் துறை திட்டமிட்டுள்ளது.
சென்னையில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று வடபழனி முருகன் கோயில். இக்கோயிலுக்கு சென்னை மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வருவது வழக்கம். இக்கோயில் 1890-ம் ஆண்டு ஓலை கொட்டகையுடன் நிர்மாணிக்கப்பட்டது. 1920-ம் ஆண்டு புதுப்பிக்கப்பட்ட இக்கோயிலுக்கு 1972-ம் ஆண்டு ராஜகோபுரம் கட்டப்பட்டது.
இந்த கோயிலில் கும்பாபிஷேகம் செய்வதற்காக பாலாலய பிரதிஷ்டை கடந்த ஆண்டு மார்ச் 12-ம் தேதி நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, திருப்பணிகளை மேற்கொள்வதற்கான ஆரம்பகட்டப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. இந்த சூழலில் கரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், அனைத்து கோயில்களும் மூடப்பட்டன. வடபழனி முருகன் கோயிலிலும் திருப்பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன.
தமிழக அரசு அறிவித்த தளர்வுகளின் அடிப்படையில் வடபழனி முருகன் கோயில் கடந்த 2020 செப்டம்பர் மாதம் திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, கோயில் கோபுரம், சன்னதிகளின் விமானம் உள்ளிட்டவற்றை புனரமைக்கும் பணி, உற்சவர் சன்னதி, பக்தர்கள் தங்குவதற்கான ஓய்வறை கட்டுவது உள்ளிட்ட திருப்பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
இந்நிலையில், திருப்பணிகளை விரைவாக முடித்து வரும் ஜூன் மாதத்துக்குள் கும்பாபிஷேகம் நடத்த கோயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘வடபழனி முருகன் கோயிலில் திருப்பணிகளை விரைந்து முடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, தற்போது, 80 சதவீத திருப்பணிகள் நிறைவடைந்துள்ளன. அனைத்து பணிகளையும் முடித்து வரும் ஜூன் மாதத்துக்குள் கும்பாபிஷேகத்தை நடத்த திட்டமிட்டு பணியாற்றி வருகிறோம்’’ என்றனர்.