செங்கல்பட்டு தொகுதி அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் கரோனா பரவலைத் தடுக்கும் விதத்தில் வாக்காளர்களுக்கு முகக்கவசம் வழங்கி பிரச்சாரம் மேற்கொண்டார்.
செங்கல்பட்டு தொகுதியில் அதிமுக சார்பில் கஜேந்திரன், திமுக சார்பில் எம்எல்ஏ ம.வரலட்சுமி, அமமுக சார்பில் சதீஷ்குமார், மநீம கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சி சார்பில் முத்தமிழ்செல்வன், நாம் தமிழர் சார்பில் சஞ்சீவிநாதன் உட்பட 13 பேர் போட்டியிடுகின்றனர்.
இத்தொகுதியில் வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வித்தியாசமான முறையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக வேட்பாளர் வரலட்சுமி, இவரது கணவர் மதுசூதனன் ஆகியோர் பல்வேறு இடங்களில் கட்சி நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.
அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் நேற்று சேந்தமங்கலம், ஆப்பூர், வெங்கடாபுரம், கொளத்தூர், வில்லியம்பாக்கம், ஆத்தூர், பாலூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அரசு வழங்கும் திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்க பாடுபடுவேன். மக்களுக்கும் என்றும் பக்கபலமாக இருப்பேன் என கூறி வாக்கு சேகரித்தார். பிரச்சாரத்துக்கு செல்லும்போது வாக்காளர்களிடம் கரோனா பரவலைத் தடுக்கும் விதத்தில் முகக் கவசம் மற்றும் சானிடைசர் வழங்கி வேட்பாளர் கஜேந்திரன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பொதுமக்களிடம் கூறியதாவது:
கரோனா தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு சிறப்பாக மேற்கொண்டதால் பாதிப்பு குறைந்திருந்தது. தற்போது கரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. எனவே, மக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். தற்போது அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அம்மா மினிகிளீனிக் ஆகியவற்றில் இலவசமாக கரோனா தடுப்பூசி போடப்படுகிறது. பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசியை கண்டிப்பாக போட்டுக்கொள்ள வேண்டும். உங்களுக்காகவும், உங்கள் குடும்பத்துக்காகவும் கண்டிப்பாக நீங்கள் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.