திருவள்ளூர் தொகுதிக்கு உட்பட்ட கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதியில் வாக்குச் சேகரித்த பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் தாஸிடம், தேநீர், உணவு செலவுக்காக பணம் அளிக்கும் வாக்காளர். 
தமிழகம்

வேட்பாளருக்கு தேநீர் செலவுக்கு பணம் அளிக்கும் வாக்காளர்கள்: வியப்பில் ஆழ்த்தும் திருவள்ளூர் தொகுதி

இரா.நாகராஜன்

திருவள்ளூர் சட்டப்பேரவை தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளராக, அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் தாஸ்(50) போட்டியிடுகிறார். திருத்தணியைச் சேர்ந்த இவர், 2014, 2019 ஆகிய ஆண்டுகளில் நடந்த நாடாளுமன்றத் தேர்தல்களில் அரக்கோணம் தொகுதியிலும், 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் திருத்தணி தொகுதியிலும் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிட்டு, வெற்றி வாய்ப்பை இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 16-ம் தேதி முதல் திருவள்ளூர் தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் தாஸ், தன் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் 10 பேருடன் கிராமப் புறங்களில் நடந்து சென்று வாக்குச் சேகரித்து வருகிறார். தாஸ் கூறியதாவது:

திருவள்ளூர் தொகுதிக்கு உட்பட்ட 300-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறேன். கிராமங்களில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் என்னிடம் கேட்கும் முதல் கேள்வி, “வாக்குக்கு எவ்வளவு பணம் தருவாய்?” என்பதுதான். இந்த கேள்வியிலிருந்தே, அவர்கள் வாக்குரிமையின் மகத்துவம் குறித்து, சரியான புரிதல் இல்லாமல் இருப்பது தெரிகிறது.

நான் அவர்களிடம், “உங்களுக்கு பணம் எல்லாம் கொடுக்க முடியாது. உங்களுக்கு ஒரு வேலைக்காரனாக இருந்து, இலவச கல்வி, மருத்துவம் மற்றும் வேலைவாய்ப்பு, தரமான குடிநீர், சாலை வசதி உள்ளிட்டவை கிடைக்க பாடுபடுவேன்” என தெரிவித்து வாக்குச் சேகரித்து வருகிறேன்.

அவ்வாறு வாக்குச் சேகரிக்கும்போது, பலர் தேநீர், உணவு செலவுக்கு வைத்துக் கொள்ளுங்கள் என, அன்போடு ரூ.100,200 என, அளித்து என்னை வியப்பில் ஆழ்த்துகின்றனர். இதுவரை எனக்கு வாக்காளர்கள் ரூ.24 ஆயிரத்துக்கும் மேல் அளித்துள்ளனர் என்றார்.

SCROLL FOR NEXT