தமிழகம்

ஆதார் தகவல்களை பெற்று பாஜக தேர்தல் விதிமீறல்: தேர்தல் ஆணையத்துக்கு புகார் அனுப்பியது சிபிஎம்

செய்திப்பிரிவு

புதுச்சேரியில் ஆதார் தகவல்களை பெற்று தேர்தல் விதிமீறலில் ஈடு பட்டுள்ள பாஜக மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தலைமை தேர்தல் ஆணையத்துக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக புதுச்சேரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில செயலாளர் ராஜாங்கம், தமிழ் மாநிலக் குழு உறுப்பினர் பெருமாள், மூத்த நிர்வாகி முருகன் ஆகியோர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் விதிகளை மதிக்காமல், பாஜகவினர் விதிமீறலில் ஈடுபட்டுள்ளனர். பாஜகவி னர் வாக்காளர்களின் செல்போன் எண்களுக்கு பேசி பிரச்சாரம் மற்றும் குறுந்தகவல் அனுப்பியுள்ளனர். இதுதொடர்பாக பிரதேச குழு உறுப்பினர் ஆனந்த், சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.

விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், தனி நபர் தரவுகள் பாஜகவுக்கு எப்படி கிடைத்தது என்று பல்வேறு கேள்விகளை எழுப்பி, இது தொடர்பாக விசாரித்து அறிக்கை அளிக்கக்கோரி புதுச் சேரி அரசுக்கும், தேர்தல் அதிகாரிகளுக்கும், ஆதார் ஆணையத்துக்கும் நோட்டீஸ் அனுப்பியுள் ளனர்.

இதுதொடர்பாக புதுச்சேரி தேர்தல் அதிகாரிகள் இதுவரை எந்த விளக்கத்தையும் தரவில்லை. செல்போன் பிரச்சாரத்துக்கும் பாஜக அனுமதி பெறவில்லை என தேர்தல் துறை கூறியிருக்கிறது.

அனுமதியின்றி தகவல் பரப்பியது, தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானதாகும்.

இதனால் தேர்தல் விதிமீறலில் ஈடுபட்ட பாஜக வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். புதுச்சேரி தேர்தல் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்துக்கு புகார் அனுப்பியுள்ளோம் எனத் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT