விருத்தாசலம் தொகுதியில் 11 அரசியல் கட்சி வேட்பாளர்களும் 10 சுயேச்சை வேட்பாளர்களும் களம் காண்கின்றனர். அரசியல் கட்சி வேட்பாளர்கள் கட்சித் தொண்டர்கள் புடைசூழ வாகன அணிவகுப்புடன், பெண்கள் ஆரத்தி தட்டுடன் காத்திருக்கும் வீதிகளில் வாக்கு சேகரித்தவண்ணம் உள்ளனர். இதற்கிடையே மகாவீர்சந்த் எனும் சுயேச்சை வேட்பாளரும் ராஜேந்திரபட்டிணத்தில் பெண்கள் புடைசூழ நடந்து சென்று வீடு வீடாக வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார். ஒவ்வொரு வீட்டிலும் நின்று தன்னுடைய வாக்குறுதியை பதிவுசெய்து விட்டு நகர்ந்து கொண்டிருந்தார்.
அப்போது அவரிடம் பேச்சுக் கொடுத்தோம், ‘வாக்குப் பதிவிற்கு குறுகிய நாட்களே உள்ள நிலையில் நடந்து சென்று வீடு வீடாக வாக்கு சேகரிப்பது சாத்தியமா! என்ற போது,“முதலில் எனது நிலையை வாக்காளர்களுக்கு புரியவைக்கவேண்டும். அவர்கள் மூலம் 10 பேருக்கு சென்றடையும். அரசியல் கட்சிப் பிரமுகர்கள் என்னைப் போன்று இறங்கி சென்று வாக்குகள் கேட்க முடியாது. அரசியல் கட்சி வேட்பாளர்கள் பலவீனம் என்பதைச் சொல்லி அதை எனக்கு பலமாக்கி வருகிறேன்.
தேர்தல் நிதர்சனத்தை நான் நன்கு அறிவேன். இருப்பினும் ஒரு மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. கடந்த 25 ஆண்டுகளாக கல்விச் சேவை அளித்து வருகிறேன். என்னிடம் படித்த மாணவர்கள் சுமார் 8 ஆயிரம் பேர் இப்பகுதியில் உள்ளனர். அவர்கள் எனக்கு பக்கபலமாக இருக்கின்றனர். அவர்கள் மூலம் வாக்குகள் கிடைக்கும் என நம்புகிறேன். கட்சிகள் சாதிக்க முடியாததை சுயேச்சை சாதிக்க முடியும் என் நிரூபித்து காட்டுவேன்” என்கிறார் மகாவீர் சந்த்.