செஞ்சி தொகுதியில் திமுக சார்பில் மீண்டும் களம் காண்கிறார் தற்போது அத்தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் மஸ்தான்.
அனந்தபுரம் பேரூராட்சியில் அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார்.
அப்பகுதியில் உள்ள டீக்கடை ஒன்றுக்கு சென்ற அவர், அங்கு வாக்கு சேகரிக்க, போகிற போக்கில் டீ மாஸ்டரிடம், “என்னப்பா என்ன ஃப்ராண்ட் இது!” என்று கேட்க, அவரும் சொல்ல, அடுத்தடுத்து தேநீர் பற்றி இருவரும் சிலாகித்து பேசிக் கொண்டனர்.
“என்ன அண்ணே இது!” என்று உடனிருந்த ஜூனியர் கழக கண்மணி ஆர்வத்தோடு கேட்க, சீனியர் ஒருவர், “அண்ணனுக்கு அந்த விஷயம் அவ்ளோ அத்துப்புடி” என்று கூற மஸ்தானும், “ஆமாப்பா, டீ மாஸ்டரா தான் என் வாழ்க்கைய தொடங்கினேன். அப்புறம் டீக்கடை வச்சேன். அப்புறமா அரசியலுக்கு வந்து உங்களோட ஐக்கியமாயிட்டேன். என்ன தான் இருந்தாலும் என் பழையத் தொழிலை மறக்க மாட்டேன்” என்று சொல்ல, “அப்படியாண்ணே!” என்று ஆர்வம் காட்டிய கழகத் தொண்டனுக்கு அதே கடையில் தன் கையால் டீ போட்டுக் கொடுத்தார். “நல்லாருக்குண்ணே!” என்று பரப்புரை செய்த களைப்பில் அவர் தேநீரை உறிஞ்ச, “மத்தவங்களும் சாப்பிடுங்கப்பா… “ஹேய் உனக்கு லைட்டா.. ஸ்ட்ராங்கா..”என கேட்டுக் கொண்டே மஸ்தான் டீ போட, அங்கு வாடிக்கையாளர்கள் சிலர் வர அவர்களுக்கும் டீ போட்டு தர, அங்கு அவர் ஒரு டீ மாஸ்டராகவே மாறிப் போனார்.
கடையில் இருந்த மாஸ்டர் சர்க்கரை, தேயிலை இதர இத்யாதிகளை எடுத்து தர, பார்த்துக் கொண்டிருந்த நமக்கும் ஒரு வாய் தேநீர் கிடைத்தது.
மஸ்தான் தொடங்கிய டீக்கடை செஞ்சி பேருந்து நிலையம் எதிரில் ‘கேஎஸ்எம் டீக்கடை’ என்ற பெயரில் இன்றைக்கும் இயங்கிக் கொண்டிருக்கிறது. அவரது தம்பி அதைப் பார்த்துக் கொள்கிறார்.