பாஜகவை எதிர்க்கும் ‘ஏ டீமாக’ நாங்கள் இருப்போம் என சகாயம் அரசியல் பேரவை நிறுவனத் தலைவரும், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான சகாயம் தெரிவித்தார்.
சகாயம் அரசியல் பேரவை சார்பில் மதுரை மேற்குத் தொகுதியில் போட்டியிடும் நாகஜோதியை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் நேற்று மதுரை வந்தார். அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நாங்கள் பாஜகவின் ‘பி டீமாக’ எதற்காக இருக்க வேண்டும். பாஜகவின் ‘பி டீம்’ என சிறு ஆதாரத்தை காட்டினால் நாங்கள் பொதுவாழ்வில் இருந்து விலகத் தயாராக இருக்கிறோம். பாஜகவை எதிர்க்கும் ஏ டீமாக நாங்கள் இருப்போம். கொள்கை இல்லாதவர்கள்தான் இவ்வாறு எங்களைக் குறை கூறுகின்றனர். எங்களது கொள்கை வலுவானது. இந்த நாட்டை மத அடிப்படையில் பிளவுபடுத்தக்கூடிய பாஜகவுக்கு நாங்கள் எப்படி ஆதரவு கொடுப்போம்.
மதுரையில் ஆண்டுக்கணக்கில் நின்று நிலைத்த மலைகள் தகர்க்கப்பட்டன. அன்று ஆட்சியராக இருந்து அரசுக்கு ரூ.16 ஆயிரம் கோடி இழப்பு என அறிக்கை அனுப்பினேன். ஆனால் அரசு என்னை பணியில் இருந்து கோ-ஆப்டெக்ஸ்க்கு மாற்றியது.
கடந்த 13 ஆண்டுகள் நஷ்டத்தில் இருந்த கோ-ஆப்டெக்ஸை ஒரே ஆண்டில் லாபகரமானதாக மாற்றினேன். வேட்டி தினத்தை அறிமுகப்படுத்தி 80 ஆண்டு கால கோ-ஆப்டெக்ஸ் வரலாற்றில் ஏழை நெசவாளர்களுக்கு ஒரு கோடி ரூபாய் போனஸ் அளித்திருக்கிறேன்.
நேர்மையாக இருந்ததற்காக அதிமுக அரசால் பழிவாங்கப்பட்டேன். திமுக அரசும் அதற்கு சளைக்காமல் என்னை பழிவாங்கியது.
தமிழகத்தில் அரசியல் மாற்றம் நிகழ வேண்டுமானால் லஞ்ச, லாவண்யத்துக்கு அப்பாற்பட்டு எங்களின் வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.