திருமங்கலம் தொகுதியில் தேர்தலை சீர்குலைக்க எதிர்க்கட்சிகள் சதி செய்வதாக அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் குற் றம் சாட்டினார்.
திருமங்கலம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஆர்.பி.உதயகுமார் தனது ஆதரவாளர் களுடன் நேற்று 30 கிலோ மீட்டர் நடை பயணம் சென்றார். டி. கல்லுப்பட்டியில் தொடங்கிய நடைபயணம் டி. குன்னத்தூர் ஜெயலலிதா கோயில், கள்ளிக்குடி, திரு மங்கலம் வழியாகச் சென்று கப்பலூரை அடைந்தது. அரசின் 10 ஆண்டு கால சாதனைகளை விளக்கி நடை பயணம் நடந்தது. அதைத் தொடர்ந்து அவர் எதிர்க் கட்சிகள் மீதான புகார் மனுவை தேர்தல் அதிகாரியிடம் வழங்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திருமங்கலம் தொகுதியில் எதிர்க் கட்சி வேட்பாளர்கள் தேர்தலில் அமை தியை சீர்குலைத்து வன்முறையை கட்டவிழ்த்துவிட சதித் திட்டம் தீட்டி உள்ளனர். தேர்தலை அமைதியான முறையில் நடத்தக் கோரி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் திருமங்கலம் தொகுதி தேர்தல் அலுவலரிடம் மனு அளித்துள்ளோம்.
அதிமுக அரசின் சாதனையை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல திமுக மிகப் பெரிய தடையாக உள்ளது. அதிமுக அரசின் சாதனையை திமுக மறைக்க நினைப்பது வானத்தை போர்வையைக் கொண்டு மூடுவதைப் போன்றது.
திருமங்கலம் தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிட குற்ற வழக்குகளில் பின்னணியில் உள்ளவரை வேட்பாளராக நிறுத்தியுள்ளனர். எதிர்க்கட்சிகளின் சதியை தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.