போடி தொகுதியில் அதிமுக சார்பில் ஓ.பன்னீர்செல்வம், திமுக சார்பில் தங்கதமிழ்ச்செல்வன், அமமுக சார்பில் மு.முத்துச்சாமி ஆகியோர் போட்டி யிடுகின்றனர். இவர்கள் மூவரும் தற்போது எதிரும் புதிருமாக இருந்தாலும் கடந்த 2016 தேர்தல் வரை அதிமுகவில் ஒருங்கிணைந்து செயல்பட்டவர்கள். அரசியல் ஓட்டத்தில் இவர்கள் தனித்தனிப்பாதையில் பயணித்து மாற்றுக்கட்சிகளுக்குச் சென்று தற்போது எதிரெதிர் வேட்பாளர்களாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் அதிமுக வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அந்தக் கட்சியிலேயே இருந்து படிப்படியாக உயர்ந்த நிலைக்குச் சென்றுள்ளார்.
இவரைப் பொறுத்தவரை 1982-ல் பெரியகுளத்தில் எம்ஜிஆர் அணி நகர துணைச் செயலாளராக இருந்தார். பின்பு 1989-ல் நகர இணைச் செயலாளர், 1993-ம் ஆண்டு நகரச் செயலாளர், 1996-ம்ஆண்டு பெரியகுளம் நகராட்சித் தலைவர், பின்பு நகரச் செயலாளர், 2000-ம் ஆண்டு மாவட்டச் செயலாளர், 2001-ம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினர், வருவாய்த்துறை அமைச்சர், தமிழக முதல்வர், பொதுப்பணித்துறை, பத்திரப்பதிவு அமைச்சர், தேர்தல் பிரிவு செயலாளர், பொருளாளர், எதிர்கட்சித் தலைவர், ஒருங்கிணைப்பாளர், துணை முதல்வர் என்று பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். குறிப்பாக அதிமுகவில் இவரது வளர்ச்சி பிரம்மாண்டமாகவே இருந்துள்ளது. 2011-ம் ஆண்டு பெரியகுளம் தனித்தொகுதியாக மாறியதால் போடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதேபோல் 2016 தேர்தலிலும் வெற்றி பெற்று போடி சட்டமன்ற உறுப்பினரானார். தற்போது போடியில் மூன்றாம் முறையாக களம் இறங்கி உள்ளார்.
இதே காலத்தில் இவருடன் இணைந்து பணியாற்றியவர் தங்கதமிழ்ச் செல்வன். ஆண்டிபட்டி தொகுதி நாராயணத்தேவன்பட்டியைச் சேர்ந்த இவர் நகர, ஒன்றியப் பொறுப்புகளில் அரசியல் வாழ்வை தொடங்கியவர். மாவட்டச் செயலாளர் என்ற நிலைக்கு உயர்ந்தார். ஆண்டிபட்டி தொகுதியில் 2001-ல் முதன்முறையாக போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினரானார். அப்போது ஊழல் வழக்கில் இருந்து விடுபட்ட ஜெயலலிதா போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகும் வகையில் ஆண்டிபட்டியில் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் இவர் மீது ஜெயலலிதாவுக்கு நன்மதிப்பு ஏற்பட்டது. எனவே இவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. பின்பு 2011 மற்றும் 2016 தேர்தல்களில் இத்தொகுதியில் வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினரானார்.
ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு கருத்து வேறுபாடால் அம்மாமக்கள் முன்னேற்றக் கழகம் உருவானது. இதன் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரனை ஆதரித்துஅதிமுகவில் இருந்து தங்கதமிழ்ச்செல்வன் விலகினார். அங்கு மாநில கொள்கைப்பரப்புச் செயலாளராக இருந்து வந்தார். கடந்த 2019-ம் ஆண்டு தேனி மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ப.ரவீந்திரநாத்தை எதிர்த்து களம் இறங்கினார். பின்பு அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். மாநில கொள்கைப் பரப்புச் செயலாளராக இருந்தவர், பின்பு தேனி வடக்கு மாவட்ட பொறுப்பாளராக பதவி வகித்து வருகிறார். தற்போது போடியில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக திமுக சார்பில் களம் இறங்கி உள்ளார்.
இவரின் துடிப்பான பேச்சு, தைரியமான செயல்பாடு அந்தந்த கட்சிகளில் இவரை அடுத்தடுத்த நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. இருப்பினும் ஆரம்பம் முதலே அனைத்துத் தளங்களிலும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிரான செயல்பாடுகளையே கொண்டுள்ளார். அதனால் போடியில் துணை முதல்வருக்கு கடும் போட்டியை ஏற்படுத்த கட்சித் தலைமை இவரை இங்கு வேட்பாளராக நிறுத்தி உள்ளது.
அமமுக சார்பில் இங்கு முத்துச்சாமி போட்டியிடுகிறார். இவருக்கும் அதிமுகவே அரசியல் தொடக்கமாக இருந்துள்ளது. சின்னமனூர் ஒன்றியச் செயலாளர், மேலப்பூலாநந்தபுரம் ஊராட்சித் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்துள்ளார். இவரது மனைவி மாவட்ட துணைச் செயலாளர், மாவட்ட கவுன்சிலர், வேளாண்மை விற்பனைக்குழுத் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்துள்ளார். தற்போது அமமுக தெற்கு மாவட்டச் செயலாளராக உள்ளார்.
இந்த மூன்று பேருமே ஒருகாலத்தில் அதிமுகவில் ஒருங்கிணைந்து செயல்பட்ட அரசியல்வாதிகள். இன்றைக்கு அரசியல் மாற்றத்தினால் மூவரும் வெவ்வேறு கட்சிகளில் உள்ளனர். தற்போது மூன்று பேருமே போடியில் ஒருவரை ஒருவர் எதிர்த்து போட்டியிடும் சூழ்நிலையை அரசியல் மாற்றம் ஏற்படுத்திவிட்டது.