நாகலாபுரம் கிராமத்தில் வாக்கு சேகரித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். 
தமிழகம்

மகளிர் சுயஉதவிக்குழு கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாக்குறுதி

செய்திப்பிரிவு

தேர்தலில் அதிமுக வெற்றிபெற்றவுடன் மகளிர் சுயஉதவிக்குழுவினரின் கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று போடியில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

போடி தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். நாகலாபுரம், கொடுவிலார்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அவர் பேசியதாவது: மனிதனுக்கு உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இருப்பிடம் ஆகியவற்றை நல்ல ஆட்சியாளர்கள் தர வேண்டும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்தினார். 20 கிலோ அரிசியை இலவசமாக வழங்கி பசியைப் போக்கினார்.

இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்குவோம் என்று கூறி அந்த வாக்குறுதியை நிறைவேற்றி இருக்கிறோம். தாலிக்குத் தங்கம் 4 கிராமில் இருந்து 8 கிராமாக உயர்த்தப்பட்டுள்ளது.

வெற்றி பெற்றதும் குலவிளக்கு திட்டத்தின் கீழ் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1,500 வழங்கப்படும் என்று சொல்லி இருக்கிறோம். அதையும் கண்டிப்பாக நிறைவேற்றுவோம். இலவச வாஷிங் மெஷின் வழங்குவோம். முதியோர் உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும். மகளிர் சுயஉதவிக்குழுவினர் வாங்கிய கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். போடி தொகுதியில் இரண்டு முறை சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு உங்களில் ஒருவனாக இருந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறேன். உங்களுக்கு சேவை செய்ய மீண்டும் இரட்டை இலை சின்னத்துக்கு ஆதரவு தாருங்கள்.இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து சிவலிங்கநாயக்கன்பட்டி, பாலகிருஷ்ணாபுரம், சங்ககோணாம்பட்டி, கோபாலபுரம், அம்பாசமுத்திரம், கோவிந்தநகரம், சோலைத்தேவன்பட்டி, லட்சுமிபுரம், குப்பிநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற் கொண்டார்.

SCROLL FOR NEXT