மீன்பிடித் திருவிழாவில் பிடிபட்ட மீன்கள். 
தமிழகம்

திருப்பத்தூர் அருகே மீன்பிடி திருவிழா: மீன்களை அள்ளிச் சென்ற கிராம மக்கள்

செய்திப்பிரிவு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே நடந்த மீன்பிடித் திருவிழாவில் ஏராளமான மீன்களை கிராம மக்கள் அள்ளிச் சென்றனர்.

திருப்பத்தூர் அருகே காட்டாம்பூர் பிள்ளனி அய்யனார் கோயில் கண்மாயில் ஆண்டுதோறும் கிராமமக்கள் சார்பில் மீன்பிடித் திருவிழா நடப்பது வழக்கம். கடந்த ஆண்டு கரோனா ஊரடங்கால் மீன்பிடித் திருவிழா நடத்தவில்லை. மேலும், இந்தாண்டு அப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்ததால் கண்மாய் நிரம்பி இருந்தது.

இதனால் அதிகளவில் மீன்கள் இருந்தன. மேலும் கோடைகாலம் தொடங்கிய நிலையில் கண்மாயில் நீர் வற்றியது.

இதையடுத்து நேற்று கிராம மக்கள் சார்பில் மீன்பிடித் திருவிழா நடந்தது. இதில் சிறியவர்கள் முதல் பெரியவர் வரை பங்கேற்று மீன்களை பிடித்தனர். அவர்கள் மடிவலை, கொசு வலை, ஊத்தா, வாரி, அரிகூடை உள்ளிட்ட மீன்பிடி பொருட்களை கொண்டு விரா, குறவை, கெளுத்தி, உளுவை, கெண்டை, ஜிலேபி போன்ற மீன்களை பிடித்துச் சென்றனர். ஏராளமான மீன்கள் கிடைத்ததால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

SCROLL FOR NEXT