தமிழகம்

இருமுனைப் போட்டியில் கன்னியாகுமரி சட்டப்பேரவைத் தொகுதி; திமுக தீவிர களப்பணி: சாதனைகளை கூறும் அதிமுக

செய்திப்பிரிவு

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அதிகமானவாக்காளர்களைக் கொண்டது கன்னியாகுமரி. இங்கு 2,92,433 வாக்காளர்கள் உள்ளனர். இந்துக்கள், கிறிஸ்தவ நாடார்கள், மீனவர்கள், வெள்ளாளர் சமூகத்தினர் அதிகமாக உள்ளனர். அதிமுக, திமுக, நாம் தமிழர்,மக்கள் நீதிமய்யம், அமமுக மற்றும் சுயேச்சைஎன 13 வேட்பாளர்கள் கன்னியாகுமரி சட்டப்பேரவைத் தொகுதியில் களத்தில் உள்ளனர். அதிமுக வேட்பாளர் தளவாய்சுந்தரம், திமுக வேட்பாளரும் சிட்டிங் எம்எல்ஏவுமான ஆஸ்டின் ஆகியோர் இம்முறையும் மோதுகின்றனர். இவர்களிடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.

துறைமுக திட்ட அரசியல்

கடந்த தேர்தலை போன்றே சரக்கு பெட்டக துறைமுக திட்ட பிரச்சினை இத்தேர்தலிலும் எதிரொலிக்கிறது. சரக்கு பெட்டக மாற்று துறைமுகம் கொண்டு வந்தால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கும் என, மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். தற்போது, கன்னியாகுமரி கடலோர கிராமங்களில் துறைமுக எதிர்ப்பு போராட்டம் நடந்து வருகிறது.

இது திமுகவுக்கு சாதகம். ஆனால்,`இத்திட்டம் தூத்துக்குடிக்கு மாற்றப்பட்டுவிட்டது. கன்னியாகுமரியில் அமையாது’ என்று, நாகர்கோவிலுக்கு நேற்றுவந்த முதல்வர் பழனிசாமி அறிவித்திருக்கிறார். இத்திட்டத்தை மையமாகக் கொண்டு மீனவர்களின் வாக்குகளை பெறுவதற்கான முயற்சியில் திமுக, அதிமுக வேட் பாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

தொகுதி பிரச்சினைகள்

கோவளம், மணக்குடி, சின்னமுட்டம் பகுதியில் கடல் சீற்றத்தின்போது மீனவ கிராமங்களில் கடல் நீர் உட்புகுவதை தடுக்க கடலரிப்பு தடுப்பு சுவர்கள் அமைக்க வேண்டும். சின்னமுட்டம் மீன்பிடி துறைமுக தளத்தை விரிவுபடுத்த வேண்டும். ஆழ்கடலில் மீன்பிடிக்க குறைந்தது 3 நாட்களாவது அனுமதிக்க வேண்டும். மீனவர்களை மீட்கஹெலிகாப்டர் தளம் அமைக்க வேண்டும். சுவாமிதோப்பு பகுதியில் விமான நிலையத்துக்கு ஏற்கனவே திட்டமிடப்பட்டு சர்வே பணிகள் நடந்துள்ள நிலையில், திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். தோவாளையில் மலர் பதப்படுத்தும் மையம், நறுமண தொழிற்சாலைகளை அமைக்க வேண்டும். அழகியபாண்டியபுரம் கூட்டு குடிநீர் திட்டத்தை கன்னியாகுமரி வரை விரிவுபடுத்த வேண்டும் என்பன போன்றவை கன்னியாகுமரி தொகுதி மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாக உள்ளது.

இருமுனைப் போட்டி

எதிர்க்கட்சி எம்எல்ஏவான ஆஸ்டினால் குறிப்பிடும்படியான திட்டங்களை தொகுதிக்கு கொண்டுவர முடியவில்லை. இருந்தபோதிலும் தொகுதி மக்கள் பிரச்சினைக்காக அவ்வப்போது போராட்டங்கள் நடத்தியிருக்கிறார். களப்பணிகளில் அதிகமாக ஈடுபட்டு வந்தார். பெரியளவிலான புகார்கள் அவர் மீது இல்லை. கிறிஸ்தவர்கள் மற்றும் மீனவர்களின் வாக்குகள் இவருக்கு பலம் சேர்ப்பவை. இதற்கு மத்தியில் திமுக முக்கிய நிர்வாகிகள் சிலர், சீட் கிடைக்காத விரக்தியில் உள்ளடி வேலையில் ஈடுபடுகின்றனர்.

தமிழக அரசின் டெல்லி மேலிடப் பிரதிநிதி தளவாய்சுந்தரம் கன்னியாகுமரி தொகுதியில் கடந்த ஓராண்டாகவே தீவிர களப்பணியில் இறங்கினார். அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது. குறைகளைக் கேட்டு அவற்றை நிவர்த்தி செய்வது போன்றவற்றில் ஈடுபட்டுவந்தார். சுற்றுலா மையமான கன்னியாகுமரி தற்போது மத்திய, மாநில அரசுகளின் திட்டத்தில் மேம்படுத்தப்பட்டிருக்கிறது. அழகியபாண்டியபுரம் கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேறி இருக்கிறது.

இவை, இவருக்கு சாதகமாக உள்ளன. தோவாளை, பூதப்பண்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து கன்னியாகுமரி வரை பரவலாக உள்ள வெள்ளாளர் வாக்குகள் இவருக்கு பலம் சேர்ப்பவை. அத்துடன் பாஜகவுக்கு எப்போதும் அதிக வாக்குகள் கிடைக்கும் அகஸ்தீஸ்வரம், சாமிதோப்பு, தென்தாமரைகுளம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்தஇந்து நாடார் வாக்குகளும் தளவாய்சுந்தரத்துக்கு சாதகமாக உள்ளன.

தளவாய் சுந்தரம்,ஆஸ்டின் ஆகிய இருவருமே தேர்தல் களத்தில் பல வெற்றி, தோல்விகளை சந்தித்தவர்கள். தங்கள் அனுபவ ரீதியிலான அணுகுமுறை மூலம் வெற்றிக்கு தேவையான வாக்குகளை தங்கள் வசம் திருப்பி வருகின்றனர். கடந்தகால தேர்தல்களில் இல்லாத அளவுக்கு இம்முறை கன்னியாகுமரி தொகுதியில் கடும் போட்டி நிலவுகிறது.

SCROLL FOR NEXT