வேலூர், ராணிப்பேட்டை மாவட் டங்களில் தபால் வாக்குகள் சேகரிக்கும் பணியின்போது வேட் பாளர்களுக்கு ஆதரவாக சிலர் வாக்குகள் சேகரித்ததாகக்கூறி அதிமுக, திமுகவினர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.
வேலூர் மாவட்டத்தில் கரோனா பரவலை தடுக்கும் வகையில், 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர், மாற்றுத்திறனாளிகள், கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்கள் தபால் வாக்குகள் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, தேர்தல் ஆணைய வழிகாட்டுதல் முறைப்படி விருப்ப மனுக்கள் கோரப்பட்டன.
வேலூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் 531 பேரும், 80 வயதுக்கு மேற் பட்ட முதியவர்கள் 2,629 பேர் என மொத்தம் 3 ஆயிரத்து 160 பேர் தபால் வாக்குகள் அளிக்க விருப்பம் தெரிவித்தனர். இவர்களுக்கு அந்தந்த தொகுதி வேட்பாளர்களின் புகைப்படத்துடன் கூடிய அச்சடிக்கப்பட்ட வாக்குச் சீட்டுகளுடன் அலுவலர்கள் வீடு, வீடாகச் சென்று தபால் வாக்குகளை சேகரித்தனர். தபால் வாக்குகள் பாதுகாப்புக்காக துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
அதன்படி, கடந்த 25-ம் தேதி தபால் வாக்குகள் சேகரிக்கப்பட்டு தொகுதி வாரியாக பெட்டியில் வைத்து பூட்டி ‘சீல்' வைக்கப்பட்ட நிலையில், விடுபட்டவர்களிடம் இருந்து தபால் வாக்குகள் சேகரிக் கும் பணி நேற்று நடைபெற்றது.
காட்பாடி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட சேண்பாக்கம் பகுதியில் தபால் வாக்குகள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்ட அரசு அலுவலர் ஒருவர் ஒரு கட்சியின் கொடி நிறத்தில் முகக்கவசம் அணிந்தபடி ஈடுபட்டுள்ளார். இதனால், சந்தேகமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர்கள் அவரை சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்த தகவலின்பேரில் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர், சிறை பிடிக்கப்பட்ட அலுவலரை மீட்டு வேறு முகக்கவசம் அணிய நடவடிக்கை எடுத்தனர்.
இது தொடர்பாக அப்பகுதி அதிமுக பிரமுகர்கள் கூறும்போது, ‘‘தபால் வாக்குகள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நபர் ஒரு அரசியல் கட்சியின் நிறத்தில் முகக்கவசம் அணிந்திருந்தார். அவருடன், அதே பகுதியைச் சேர்ந்த சிப்பந்தியின் உறவினர் ஒருவரும் பின்னால் சென்று கொண்டே இருந்தார். அவர், தபால் வாக்கு செலுத்தும் முதியவர் களிடம் ஒரு கட்சியின் சின்னத்தை சைகை காட்டி ஓட்டு போடச் செய்தார். இதனை, தடுத்து நிறுத்தி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தோம். அவர்கள் வருவதற்குள் அந்த நபர் ஓடிவிட்டார்’’ என்று தெரிவித்தனர்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 697 பேர் தபால் வாக்களிக்க விருப்பம் தெரிவித்திருந்தனர். அவர்களிடம் தபால் வாக்குகள் சேகரிக்கும் பணி நேற்று பாதுகாப்புடன் நடந்தது. இதில், ராணிப்பேட்டை தொகுதியில் 34 பேர் வாக்களிக்க இருந்த நிலையில் ரொட்டிக்கார தெருவில் வாக்குகள் சேகரிக்கும் பணி நடைபெற்றது.
அப்போது, வாக்காளர் ஒரு வரின் வீட்டுக்குள் சென்ற அரசு பெண் அதிகாரி ஒருவர் ஒரு கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்குகள் சேகரித்ததாக தெரிகிறது. அவர் அக்கட்சியின் வேட் பாளருக்கு நெருங்கிய தொடர் பில் இருக்கும் நபரின் மனைவி என்பதால் திமுகவினர் அங்கு திரண்டனர்.
இந்த தகவலறிந்த தேர்தல் பொது பார்வையாளர் அருண் கே.விஜயன் அந்த பகுதிக்கு விரைந்து சென்று விசாரணை செய்தார். மேலும், முதியவர் ஒருவரின் தபால் வாக்கை மீண்டும் பதிவு செய்ய ஏற்பாடு செய்தார். இதனால், அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.