திமுக வேட்பாளர் லட்சுமணனுடன் முன்னாள் நகர் மன்றத் தலைவர் ஜனகராஜ். 
தமிழகம்

அமைச்சர் சி.வி.சண்முகம் வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடா செய்கிறார்: திமுக வேட்பாளர் குற்றச்சாட்டு

எஸ். நீலவண்ணன்

விழுப்புரம் தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் சி.வி.சண்முகமும், திமுக சார்பில் லட்சுமணனும் இத்தேர்தலில் நேருக்கு நேர் மோதுகின்றனர். இருவரும் பரபரப்பாகத் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று மாலை திமுக வேட்பாளர் லட்சுமணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"தமிழகம் முழுவதும் அரசுக்கு எதிராகவும், விழுப்புரம் தொகுதியில் அரசுக்கு எதிராகவும், அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு எதிராகவும் அலை வீசுகிறது. மக்கள் எங்கள் பக்கம் உள்ளனர்.

அமைச்சர் சி.வி.சண்முகம் போலீஸ் எஸ்கார்ட் உதவியோடு வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடா செய்கிறார். இதுகுறித்து மாவட்டத் தேர்தல் அலுவலரான ஆட்சியர் அண்ணாதுரையிடம் புகார் அளித்துள்ளோம். இதுவரை நடவடிக்கை இல்லை.

வன்னியர்களுக்காக 10.5 சதவீத இட ஒதுக்கீடு என்பது முன்பு குளத்தில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டது. தற்போது குட்டையிலிருந்து எடுக்கப்படும் என்கிறார்கள். மக்கள் இதனைப் பொருட்படுத்தவில்லை.

நான் தேர்வு செய்யப்பட்டால் விழுப்புரம் நகரில் கடந்த 10 ஆண்டுகளாகப் பராமரிப்பு இல்லாத புதிய பேருந்து நிலையம் பராமரிக்கப்படும். விழுப்புரம் நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க சுற்றுவட்டச்சாலை அமைக்கப்படும். விரிவாக்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும்.

வாடகை கார், வேன்களுக்குத் தனி இடம், மீன், காய்கறி அங்காடி அமைக்க அவர்களின் கருத்து கேட்டு தனி இடம் அமைத்துத் தரப்படும். மேலும் நகரில் சமுதாயக்கூடம், நூலகங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், மியூசியம் அமைக்கப்படும். கிராமங்களில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்."

இவ்வாறு திமுக வேட்பாளர் லட்சுமணன் கூறினார்.

SCROLL FOR NEXT