மீனவ மக்களிடம் சூழ்ச்சி செய்து தேர்தல் நேரத்தில் ஒரு ஆயுதமாக சரக்கு பெட்டக துறைமுக விஷயத்தைp பயன்படுத்துகின்றனர். கன்னியாகுமரியில் சரக்கு பெட்டக துறைமுகம் அமைக்கப்படாது என நாகர்கோவிலில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் பழனிசாமி உறுதியளித்தார்.
தமிழக முதல்வர் பழனிசாமி இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் செட்டிகுளம் சந்திப்பில் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.
அவர் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன். குமரி சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் தளவாய் சுந்தரம், ஜான் தங்கம், பாஜக வேட்பாளர்கள் எம்.ஆர்.காந்தி, குமரி ரமேஷ், ஜெயசீலன், தமாகா வேட்பாளர் ஜூட்தேவ் ஆகியோரை ஆதரித்து வாக்குகள் கேட்டு பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது;
பொன் ராதாகிருஷ்ணன் மத்திய அமைச்சராக இருந்தபோது பல நலத்திட்டங்களைப் பெற்றுத்தந்துள்ளார். கடந்த தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 சட்டப்பேரவைத் தொகுதி, மற்றும் மக்களவைத் தொகுதியில் ஆளுங்கட்சி பிரதிநிதிகள் யாரும் இல்லாததால் பல திட்டங்கள் நிறைவேற்றப்பட முடியாமல் போனது.
மத்தியிலும், மாநிலத்திலும் பிரதிநிதிகள் இல்லாமல் இருந்தால் வளர்ச்சிகள் எவ்வாறு நடைபெறும். இதனால் முழுமையான திட்டங்கள் இந்த மாவட்டத்திற்கு வந்துசேரவில்லை. பொன் ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றால் குமரி மாவட்டம் வளர்ச்சி பெறும். மத்தியில் பாஜக ஆட்சி நடைபெறுவதால் அவரால் வளர்ச்சித் திட்டங்களை கொண்டு வரமுடியும்.
கன்னியாகுமரியில் சரக்கு பெட்டக துறைமுகம் வருவதாக எதிர்கட்சியினர் தவறான செய்தியைப் பரப்பி வருகின்றனர். தேர்தல் நேரத்தில் இது பரப்பப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் சரக்கு பெட்டக துறைமுகம் அமைக்கப்படமாட்டாது.
மக்கள் எதிர்கட்சியினர் சொல்வதை நம்ப வேண்டாம். தேர்தல் நேரத்தில் இதை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்துகின்றனர். இவ்விஷயத்தில் எதிர்கட்சியினர் சூழ்ச்சி செய்கின்றனர்.
தேர்தல் நேரத்தில் திமுக, காங்கிரஸ் கட்சியினர் சேர்ந்து மீனவர்களின் வாக்குகைளைப் பெறுவதற்காக இதை பரப்புகின்றனர். எனவே மீனவர்களும், பொதுமக்களும் இந்த பொய் செய்தியை நம்ப வேண்டாம். ஆணித்தரமாக நான் சொல்கிறேன். கன்னியாகுமரியில் வர்த்தக துறைமுகம் அமைக்கப்பட மாட்டாது.
குமரியில் திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றினார்களா? எங்களுக்கு எம்எல்ஏ. முக்கியமல்ல. மக்கள் தான் முக்கியம். நாகர்கோவில் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்ந்தியது அதிமுக அரசு. தேர்தல் சமயத்தில் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம்.
10 ஆண்டுகளாக அதிமுக செய்த நலத்திட்டங்களை திமுகவினர் திசைதிருப்பி தவறான பிரச்சாரம் செய்து வருகின்றனர். திமுக ஆட்சி இருண்ட ஆட்சியாக இருந்தது. கடும் மின்வெட்டு நிலவியது. இன்று தடையில்லா மின்சாரம் வழங்கி வருகிறோம். தமிழகம் வெற்றி நடைபோடும் தமிழகம் என்ற நிலையை அடைந்துள்ளது.
சுற்றுலா மையமான கன்னியாகுமரியில் சுற்றுலாவை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ரூ.20 கோடி மதிப்பில் திருவள்ளுவர் சிலைக்கும், விவேகானந்தர் மண்டபத்திற்கும் இடையே ரூ.20 கோடியில் பாலம் அமைக்கும் திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும்.
கன்னியாகுமரியில் கூடுதல் படகு நிறுத்தும் தளம் அமைக்கப்படும். இவ்வாறு முதல்வர் கே.பழனிசாமி பேசினார். அதைத்தொடர்ந்து தோவாளையில் பிரச்சாரம் மேற்கொண்டார்.