தமிழகம்

கார்ப்பரேட்டுகளுக்குத் துணைபோகும் பாஜக; அப்பாவின் கனவுகளை நிஜமாக்குவேன்: விஜய் வசந்த் பிரச்சாரம்

செய்திப்பிரிவு

அப்பாவின் கனவுகளை நிஜமாக்குவேன் என்றும் கார்ப்பரேட்டுகளுக்கு பாஜக துணை போவதாகவும் கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் பிரச்சாரம் செய்தார்.

கன்னியாகுமரி தொகுதி எம்.பி.யாக இருந்த வசந்தகுமார் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த ஆண்டு காலமானார். இதைத் தொடர்ந்து கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இடைத்தேர்தலும் அறிவிக்கப்பட்டது.

இதில் காங்கிரஸ் கட்சி சார்பில், வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பாஜக சார்பில் களம் காண்கிறார்.

தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், விஜய் வசந்த் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தொகுதிக்குள் இன்று அவர் பேசும்போது, ''மத்தியில் ஆளும் பாஜக அரசு மக்கள் விரோதத் திட்டங்களை கொண்டு வந்துள்ளது. குறிப்பாக விவசாயிகளுக்கு விரோதமான 3 வேளாண் சட்டங்களைக் கொண்டுவந்து நம் முதுகெலும்பான விவசாயிகளைத் துன்புறுத்துகிறது, கார்ப்பரேட்டுகளுக்குத் துணைபுரிகிறது. அதை நாம் மாற்ற வேண்டும். நான் புதிய ஒரு மாற்றத்தைக் கொண்டு வருவேன்.

எனவே மத்திய அரசை அகற்றுவதற்கான தொடக்கப் புள்ளியாக கன்னியாகுமரி தொகுதி இடைத்தேர்தலில் என்னை மக்களவை எம்.பி.யாக நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.

கன்னியாகுமரி மக்களுக்கும் தொகுதிக்கும் பல்வேறு நலத்திட்டங்களை செய்ய வேண்டும் என்று அப்பா திட்டமிட்டிருந்தார். கனவோடு இருந்தார். சொல்லப்போனால் பல திட்டங்களைத் தீட்டி வைத்திருந்தார். அவரின் கனவுகளை நிஜமாக்க எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்’’ என்று விஜய் வசந்த் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT