பச்சை விவசாயி, பரம்பரை விவசாயி என்று தன்னைக் கூறிக்கொள்ளும் தமிழக முதல்வர் பழனிசாமி, டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்காதது ஏன்? என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தருமபுரி மாவட்டம் அரூர் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் குமார் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவு கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் அரூர் தொகுதியில் பல இடங்களில் இன்று (27-ம் தேதி) பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
முன்னதாக அவர் தருமபுரியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது:
''தமிழகத் தேர்தல் களத்தில் அதிமுகவுக்கு ஆதரவான அலை வீசி வருவதாக அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார். ஆனால், உண்மையில் திமுக அணிக்கு ஆதரவான அலைதான் வீசி வருகிறது.
சமையல் எரிவாயு விலை உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு போன்றவற்றால் குடும்பத் தலைவிகளும், சாமானியர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சூழலில் தமிழக அரசும், மத்திய அரசும் எரிபொருள் மீதான கலால் வரியைக் குறைக்கவில்லை. இது, அதிமுக கூட்டணி மீது வெறுப்பை உருவாக்கி உள்ளது.
தன்னைப் பச்சை விவசாயி என்றும், பரம்பரை விவசாயி என்றும் முதல்வர் பழனிசாமி கூறிக் கொள்கிறார். ஆனால், விவசாயிகள் நலனை பாதிக்கும் வேளாண் சட்டங்களை எதிர்த்து, தலைநகர் டெல்லியில் 120 நாட்களைக் கடந்து போராடி வரும் விவசாயிகளுக்கு அவர் ஏன் ஆதரவு தெரிவிக்கவில்லை. சேலம்- சென்னை இடையிலான 8 வழிச் சாலை வேண்டாமென விவசாயிகள் போராடி வருகின்றனர். விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனாலும், இந்தத் திட்டத்துக்குத் தமிழக அரசு உச்ச நீதிமன்றம் வரை சென்று அனுமதி பெற்று வந்துள்ளது.
விளைநிலங்களில் கெயில் எரிவாயு குழாய் பதிப்பது, உயர் மின் கோபுரங்கள் அமைத்தல் என விவசாயிகளைப் பாதிக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் செய்துள்ளார். இதற்காகப் போராடியவர்களைக் கைது செய்து சிறைக்கு அனுப்பிய முதல்வர் பழனிசாமி எப்படி விவசாயிகளின் நண்பன் ஆவார்?. இதுபோன்ற நடவடிக்கைகளால் தமிழக விவசாயிகள் இந்த அரசின் மீது கொதிப்படைந்துள்ளனர். மேற்கு மண்டலம் உள்ளிட்ட தமிழகப் பகுதிகளில் உள்ள சிறு, குறு தொழில்கள், நெசவுத் தொழில் ஆகியவை நலிவுற்று வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
புதிய வேலை வாய்ப்பை உருவாக்குவதற்கான எந்த நடவடிக்கைகளையும் மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ளவில்லை. போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்கவில்லை. அங்கன்வாடி, சத்துணவுப் பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் தொகுப்பூதியத்தில் பணியாற்றுபவர்களைப் பணி நிரந்தரம் செய்ய அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
இந்தத் தேர்தல் மூலம் தமிழகத்தில் பாஜக கால் பதிக்க நினைக்கிறது. அந்த எண்ணம் முறியடிக்கப்படும். இந்தத் தேர்தலில், அதிமுக கூட்டணி தமிழகத்தின் அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வி அடையும். பாஜக போட்டியிடும் அனைத்துத் தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கும். இந்த அரசை வீட்டுக்கு அனுப்ப மக்கள் காத்திருக்கிறார்கள்''.
இவ்வாறு பாலகிருஷ்ணன் பேசினார்.