தமிழகம்

ஆ.ராசா, லியோனியின் பேச்சு சர்ச்சை எதிரொலி; கண்ணியக் குறைவான பேச்சை திமுக ஏற்காது: ஸ்டாலின் அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

ஆ.ராசா, லியோனி ஆகியோரின் பேச்சு சர்ச்சையான நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் தனது கட்சியினர் கவனத்துடன் பேச வேண்டும் என்றும், கண்ணியக் குறைவான பேச்சை திமுக ஏற்காது என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

திமுக கொள்கை பரப்புச் செயலாளர் லியோனி பெண்கள் உடல்வாகு குறித்துப் பேசிய பேச்சு சமூக வலைதளங்களில் பலராலும் விமர்சிக்கப்பட்டது. அந்தப் பரபரப்பு அடங்குவதற்குள் ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி அரசியலில் வளர்ந்த விதத்தை ஒப்பிடும் விதத்தில் பேசுகிறேன் என ஆ.ராசா பேசிய வார்த்தைகள் பலத்த சர்ச்சையை உண்டாக்கின.

முதல்வரின் பிறப்பையும், தாயாரையும் அவதூறாகப் பேசுவதா? என பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் கண்டிக்க, ஆ.ராசா அதற்கு தன்னிலை விளக்கம் கொடுத்து வெட்டியும் ஒட்டியும் தவறாகச் சித்தரித்துள்ளதாக விளக்கம் அளித்தார்.

ஆனாலும், திமுக தலைமை அதைக் கண்டிக்கவில்லை என்கிற கருத்து பரவலாக எழுந்த நிலையில், கண்ணியக் குறைவான பேச்சுகளை திமுக எப்போதும் ஏற்காது என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கை:

“அன்புடைய கட்சி உறுப்பினர்களுக்கு, மக்களிடையே பிரச்சாரம் செய்யும்போது நமது கட்சியின் மரபையும் மாண்பையும் மனதில் வைத்துச் செயல்படுமாறு கேட்டுக் கொள்கிறேன். வெற்றிக்கு முன், வெற்றிக்கான பாதையும் முக்கியமானது என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.

பிரச்சாரத்தில் ஈடுபடும்போது கட்சியினர் உணர்ச்சிவசப்பட்டு, கண்ணியக் குறைவான சொற்களை வெளிப்படுத்திடக் கூடாது. அப்படிப்பட்ட சொற்கள் உதிர்த்திடுவதைக் கண்டிப்பாகத் தவிர்த்திட வேண்டும் என்பதையும், அத்தகைய பேச்சுகளைக் கட்சித் தலைமை ஒருபோதும் ஏற்காது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அண்ணா வலியுறுத்திய கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு ஆகிய மூன்றில், பேச்சாளர்களின் முதன்மை அம்சமாக இருக்கவேண்டியது கண்ணியமாகும். அதை நினைவில் கொண்டு பேச வேண்டும்.

திமுக கூட்டணியின் வெற்றி உறுதியாகவும் வலிமையாகவும் மக்களால் தீர்மானிக்கப்பட்டுவிட்ட நிலையில், கட்சியினரின் பேச்சுகளைத் திரித்து, வெட்டி - ஒட்டி, தவறான பொருள்படும்படி செய்து வெற்றியைத் தடுக்க நினைத்து மூக்குடைபட்டவர்கள், இப்போதும் தோல்வி பயத்தால் மீண்டும் அதே பாணியை மேற்கொண்டிருக்கிறார்கள்.

அவர்களது எண்ணம் ஈடேறாத வகையில், கவனத்துடன் சொற்களைப் பயன்படுத்த வேண்டும் எனக் கட்சியினரைக் கேட்டுக் கொள்கிறேன்”.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT