ஓசூர் வனக்கோட்டம் உரிகம் வனச்சரகத்தில் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வேட்டைத் தடுப்புக் காவலர். 
தமிழகம்

உரிகம் வனச்சரகத்தில் காட்டுத் தீ: அணைக்கும் பணியில் வனத்துறை தீவிரம்- மக்களிடையே விழிப்புணர்வுப் பிரச்சாரம்

ஜோதி ரவிசுகுமார்

உரிகம் வனச்சரகத்தில் உள்ள காப்புக்காடுகளில் கோடை காலத்தின் தொடக்கத்திலேயே கடும் வெயில் காரணமாக ஆங்காங்கே தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது. இதை அணைத்து வரும் வனத்துறையினர், மக்களிடையே விழிப்புணர்வுப் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

உரிகம் வனச்சரகத்தில் தக்கட்டி, பிலிக்கல், கெஸ்த்தூர், மஞ்சுகொண்டப்பள்ளி, மல்லள்ளி, உரிகம் உள்ளிட்ட 6 காப்புக்காடுகள் உள்ளன. இந்தக் காப்புக்காடுகளில் ஆண்டுதோறும் கோடை காலத்தில் கடும் வெயில் காரணமாக வனத்தில் உள்ள காய்ந்த மூங்கில் புதர்கள், புற்கள், சருகுகள் மற்றும் செடிகொடிகள் தீப்பற்றி எரிவது வழக்கமான நிகழ்வாக உள்ளது. இந்த ஆண்டும் அதேபோலக் காட்டுத் தீ ஏற்பட்டது.

இந்தக் காட்டுத் தீயை அணைத்து வரும் வனத்துறை, அரியவகை வன விலங்குகள் மற்றும் அரிய மூலிகை மரங்களைப் பாதுகாக்கும் வகையில் மாவட்ட வனத்துறை சார்பில் கிராம மக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரம், வாகன சோதனை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதுகுறித்து உரிகம் வனச்சரகர் வெங்கடாசலம் கூறியதாவது:

''தற்போது கோடை காலத்தின் தொடக்க நிலையிலேயே கடுமையான வெயில் காரணமாக உரிகம் வனச்சரகத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. வனத்தை ஒட்டியுள்ள கிராம மக்கள் மற்றும் வழிப்போக்கர்கள் ஆகியோர் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களைப் பயன்படுத்துவது உள்ளிட்ட தவறான நடவடிக்கைகளால் இந்த காட்டுத் தீ ஏற்படுகிறது. தற்போது உரிகம் காப்புக் காட்டிலும் அதைத் தொடர்ந்து மல்லள்ளி காப்புக் காட்டிலும் ஆங்காங்கே தீப்பற்றி எரிந்து வருகிறது. இந்தக் காட்டுத்தீயை அணைக்க மாவட்ட வன அலுவலர் பிரபு உத்தரவின் பேரில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், உரிகம் வனச்சரகத்தைச் சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் மக்களிடையே நேரடியாகச் சென்று வனப்பகுதியில் தீப்பற்றக்கூடிய பொருட்களைக் கொண்டு செல்லக்கூடாது என்று வலியுறுத்தி விழிப்புணர்வுப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதேபோல உரிகம் வனச்சரகத்தில் உள்ள சோதனைச் சாவடிகளில் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி தீப்பிடிக்கக் கூடிய பொருட்கள் எடுத்துச் செல்லப்படுகின்றனவா என்று சோதனை நடத்தப்படுகிறது. மேலும், வனப்பகுதியில் தீப்பற்றும் பொருட்களான பீடி, சிகரெட், மண்ணெண்ணெய், டீசல், பெட்ரோல் மற்றும் கேஸ் ஸ்டவ் உள்ளிட்ட பொருட்களை எடுத்துச்செல்லக் கூடாது. சமையல் செய்யக் கூடாது. வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்தக் கூடாது. வனப்பகுதியில் அத்துமீறி உள்ளே செல்லக் கூடாது.

வனப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் வகையில் பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தி வாகன சோதனையின்போது விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இதற்காக சோதனைச் சாவடியில் தலா 3 பேர் கொண்ட இரண்டு குழுக்கள் மூலமாக இரவு, பகல் என 24 மணி நேரமும் சோதனை மற்றும் விழிப்புணர்வுப் பணி நடைபெற்று வருகிறது''.

இவ்வாறு வெங்கடாசலம் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT