மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் அறுபத்து மூவர் திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது.இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது.இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். நடப்பு ஆண்டு பங்குனி பெருவிழாகடந்த 19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
இதைத் தொடர்ந்து, கபாலீஸ்வரர் கோயிலில் நேற்று காலை 10.30 மணியளவில் திருஞானசம்பந்தர் எழுந்தருளினார். இதையடுத்து, திருஞானசம்பந்தர் பூம்பாவை எனும் சிறுமியை உயிர்ப்பிக்கும் திருக்காட்சி மேற்கு குளக்கரையில் உள்ள மண்டபத்தில் நடைபெற்றது.
மாட வீதிகளில் பவனி
நேற்று பிற்பகல் 2.45 மணிக்குவெள்ளி விமானத்தில் கபாலீஸ்வரர் எழுந்தருளினார். இதையடுத்து விநாயகர் முன்செல்ல கபாலீஸ்வரர் பின்னால் வர கற்பகாம்பாள், சிங்காரவேலர், கோலவிழி அம்மன்தொடர்ந்து வர விழா நடைபெற்றது. கேடயம் என்னும் விமானங்களில் ஒன்றுக்கு நால்வர் வீதம் 18 விமானங்களில் 63 நாயன்மார்களும் பவனி வந்தனர்.
இந்த விமானங்களுடன் திருஞான சம்பந்தர், அப்பர், சுந்தரர்,மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும்தனித்தனியாக பெரும் பல்லக்குகளில் உடன் வந்தனர். நான்கு மாடவீதிகளிலும் நடைபெற்ற வீதிஉலாவை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர். உற்சவ மூர்த்திகள் அனைவரும் இரவு 10 மணியளவில் கோயிலை மீண்டும் வந்தடைந்தனர்.
அறுபத்து மூவர் திருவிழாவையொட்டி ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கரோனா பரவல் அதிகரித்து வருவதால் பெரும்பாலான பக்தர்கள் முகக் கவசம் அணிந்திருந்தனர்.
முகக் கவசம் அணியாத பக்தர்களை முகக் கவசம் அணியும்படி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் அறிவுறுத்தினர். இதுமட்டுமின்றி, சென்னை மாநகராட்சி மற்றும் காவல் துறை சார்பில் கரோனா பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து தொடர்ந்து ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டது. அறுபத்து மூவர் திருவிழாவையொட்டி தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனத்தினர் உள்ளிட்டோர் பக்தர்கள் அதிகம் கூடும் இடங்களில் பந்தல் அமைத்து அன்னதானம், மோர், குடிநீர் உள்ளிட்டவற்றை வழங்கினர்.
அறுபத்து மூவர் விழாவை தொடர்ந்து நேற்று இரவு 10 மணிக்குபார்வேட்டைக்கு சந்திரசேகர் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது. நாளை இரவு 7.30 மணிக்கு கபாலீஸ்வரர், கற்பகாம்பாள் திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது.