தமிழகம்

ஈரோட்டில் வீரமணி கூட்டத்தை புறக்கணித்த திமுக வேட்பாளர்: அதிர்ச்சியில் திராவிடர் கழகம்

எஸ்.கோவிந்தராஜ்

ஈரோடு மேற்கு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சு.முத்துசாமி, ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவெரா ஆகியோரை ஆதரித்து திராவிடர் கழகம் சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பங்கேற்று திமுக, காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அவரது மகனும், ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளரான திருமகன் ஈவெரா, திருப்பூர் எம்.பி. சுப்பராயன் ஆகியோர் மட்டும் பங்கேற்றனர். திமுக வேட்பாளர் முத்துசாமியோ, அவரது கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளோ, வீரமணியுடன் ஒரே மேடையில் வாக்குச் சேகரிப்பதைத் தவிர்த்தனர்.

இதுதொடர்பாக பெயர் வெளியிட விரும்பாத திமுக நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: ’ஏற்கெனவே திமுக மீது இந்து விரோத கட்சி என்ற முத்திரை குத்தப்பட்டுள்ளது. நாங்கள் இந்துக்களுக்கு எதிரி அல்ல என ஸ்டாலின் ஊர், ஊராக தன்னிலை விளக்கம் கொடுக்கும் நிலை ஏற்பட்டுஉள்ளது. இந்த நிலையில், திராவிடர் கழக மேடையில் ஏறி ஆதரவு கேட்டால், அது திமுக வேட்பாளரின் வெற்றியைப் பாதிக்கும்.மேலும், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி தனது பிரச்சாரத்தின்போது, கடவுள் மறுப்பு குறித்தும்,
இந்து மதம் குறித்தும் விமர்சனம் செய்தால், அது திமுகவிற்கு எதிராக திரும்பும் வாய்ப்பு உள்ளது. எனவே, இன்று (26-ம் தேதி) ஸ்டாலின் ஈரோடு வருவதால், அதற்கான ஏற்பாடுகளை கவனிக்கச் செல்வதாகக் கூறி, சில நிமிடங்கள் மட்டும் தலையைக் காட்டிவிட்டு, வீரமணி மேடைக்கு வருவதற்குள், அங்கிருந்து புறப்பட்டுவிட்டோம்', என்றனர்.

ஏற்கெனவே, மக்களவைத் தேர்தல் நேரத்திலும், தி.க.தலைவர் வீரமணியின் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்காமல் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி தவிர்த்த சம்பவமும் நடந்துள்ளது.

இதற்கிடையே ஈரோடு பிரச்சாரக் கூட்டத்தில், இந்து மத எதிர்ப்பு, கடவுள் மறுப்பு குறித்து எதுவும் பேசாத தி.க.தலைவர் வீரமணி, பாஜக, அதிமுக எதிர்ப்பை மட்டும் பதிவு செய்து தனது பேச்சை நிறைவு செய்தார்.

திமுகவினர் புறக்கணிப்பு குறித்து திராவிடர் கழக மாநில அமைப்புச் செயலாளர் த.சண்முகத்திடம் கேட்டபோது, ‘மாலை 6.45 மணிக்கு திமுக வேட்பாளர் முத்துசாமியை வரச்சொல்லி இருந்தோம். அவரும் மேடைக்கு வந்து விட்டார். ஆனால், தலைவர் வீரமணி வருவதற்கு தாமதமானது. இந்நிலையில் ஸ்டாலின் ஈரோடு வருகைக்கான ஏற்பாடுகளைக் கவனிக்க வேண்டியிருந்ததால், திமுக வேட்பாளர் உடனே புறப்பட்டுச் சென்று விட்டார். திமுகவினர் நிகழ்ச்சியை புறக்கணித்தனர் என்பது தவறானது’ என்றார்.

SCROLL FOR NEXT