தமிழ் மொழி, தமிழர் பண்பாடு ஆகியவற்றை பாஜக பாதுகாக்கும் என திட்டக்குடியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பாஜக தேசியதலைவர் ஜே.பி.நட்டா உறுதி அளித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி தனித் தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் தடா து.பெரியசாமி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து நேற்று திட்டக்குடியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசியதாவது:
48 ஆயிரம் இந்து கோயில்கள் இந்த மண்ணில் உள்ளன. வள்ளலார், 63 நாயன்மார்கள் பிறந்த மண்இது. தமிழ் மொழியின் இலக்கணம், பண்பாடு தொன்மை வாய்ந்தது. முருகக் கடவுளை இழிவுபடுத்தும் வகையில் கந்தசஷ்டி கவசத்தை அவமதித்தவர்களை தமிழகத்தில் எந்தக் கட்சியும் கண்டிக்க முன்வராத நிலையில், பாஜக அதைக் கண்டித்து வேல் யாத்திரை நடத்தி, அவர்களுக்கு பாடம் புகட்டியது. அதன் விளைவாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினே வேல் ஏந்தவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தமிழ் பண்பாடு, தமிழ் மொழியை பாஜக பாதுகாக்கும்.
கடந்த காலத்தில் ஜக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தமிழகத்துக்கு ஆண்டுக்கு ரூ. 90 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது பாஜக ஆட்சியில் இதுவரை ரூ.19 லட்சத்து 50 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் தமிழகத்துக்கு ரூ.2 லட்சம்கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.