தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி பல்வேறு இடங்களில் தேர்தலில் பணப்பட்டுவாடாவை தவிர்க்க வருமானவரித் துறையினர் சோதனை மேற்கொள்கின்றனர். திருவண்ணாமலை மாவட்ட திமுகசெயலர் எ.வ.வேலு, திருவண்ணாமலை சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடுகிறார். இவருக்கு சொந்தமான கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் வீடுகள் என 18 இடங்களில், வருமானவரித் துறையினர் நேற்றுமுன்தினம் காலையில் சோதனையை தொடங்கினர்.
2-வது நாளாக நேற்றும் தொடர்ந்த சோதனை 30 மணி நேரத்துக்குப் பிறகு நேற்று மாலையில் நிறைவடைந்தது. இதேபோல் சென்னை ஆழ்வார்பேட்டையில் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடத்தில் நடைபெற்ற சோதனையும் நிறைவுபெற்றது.இச்சோதனையில் ஆவணங்கள் மற்றும் பணம் கைப்பற்றப்பட்டதா என்பது குறித்த எந்த தகவலையும் வருமானவரித் துறையினர் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
வருமானவரித் துறை சோதனைகுறித்து எ.வ.வேலு செய்தியாளர்களிடம் கூறும்போது, “வருமான வரித்துறையினர்110 பேர் எனக்கு சொந்தமான இடங்களில் கடந்த 2 நாட்களாக சோதனை நடத்தினர். பலமுறை தேர்தலில் நான் போட்டியிட்டபோது சோதனைக்கு வராத வருமானவரித் துறையினர் இப்போது வரக் காரணம், திருவண்ணாமலையில் போட்டியிடும் பாஜக வேட்பாளரை வெற்றி பெறவைக்கத்தான். எனது நிறுவனங்களில் ரூ.3.50 கோடி கைப்பற்றப்பட்டதாக செய்தி வெளியானது. ஆனால் ஒரு பைசா கூட அவர்கள் கைப்பற்றவில்லை” என்றார்.
கரூரில் சோதனை
கரூரில் உள்ள 5 நிதி நிறுவனங்களில் கடந்த 10 நாட்களில்ரூ.250 கோடி பணப் பரிவர்த்தனைநடைபெற்றதாகக் கூறப்படுகிறது. எனவே, தேர்தலில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டதா என்ற சந்தேகத்தின் அடிப்படையில், கரூரில் உள்ள செங்குந்தபுரம், ராம் நகர்ஆகிய இடங்களில் உள்ள ஜவுளிஉற்பத்தி, ஏற்றுமதி நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், அவற்றின் உரிமையாளர்களின் வீடுகளில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர்.
நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணிவரை நடைபெற்ற சோதனை மீண்டும் நேற்று 2-வது நாளாக நீடித்தது. இச்சோதனையில் சில ஆவணங்கள், கணக்கில் வராத ரூ.5 கோடி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
விஜயபாஸ்கருக்கு நெருக்கமானவர்
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை வடக்கு ஆசாரி தெருவைச் சேர்ந்தவர் எம்.வீரபாண்டியன். இவர், புதுக்கோட்டை மாவட்ட காசநோய் பிரிவில் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளராக உள்ளார். மேலும், மாநில மக்கள்நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் அண்ணன் உதயகுமாருக்கு தனி உதவியாளராக இருப்பதுடன், அவருக்குசொந்தமாக இலுப்பூர் அருகே மேட்டுசாலையில் உள்ள கல்லூரியையும் கவனித்து வருகிறார். பெரும்பாலான நேரங்களில் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு தனி உதவியாளராகவும் இருந்து வருகிறார்.
இந்நிலையில், விராலிமலையில் உள்ள வீரபாண்டியனின் அடுக்குமாடி வீட்டில் வருமான வரித்துறை துணை ஆணையர் அனுராதா தலைமையில் 7 பேர் நேற்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மேலும், அதனருகே வீரபாண்டியனுக்கு சொந்தமான 6வீடுகளைக் கொண்ட குடியிருப்பிலும், அண்டை வீடுகளிலும் அதிரடிசோதனை செய்தனர்.
விராலிமலையில் போட்டியிடும் சி.விஜயபாஸ்கருக்கு ஆதரவாக வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக, வீரபாண்டியன் வீடு உள்ளிட்ட சில இடங்களில் பணம், பரிசுப்பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.