முதல்வருக்கு நெருக்கமானவர்கள் சொத்து வாங்கியதாக எழுந்துள்ள புகார் குறித்து எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''முதல்வருடன் நீண்டகாலமாக உடன் இருக்கும் ஒருவரது குடும்பத்தினர் பெரும் மதிப்புள்ள சொத்துக்கள் வாங்கியிருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
இதுகுறித்து நான் மட்டுமல்ல, தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சித் தலைவர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். இவ்வளவு சொத்துக்கள் வாங்க எங்கிருந்து பணம் வந்தது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் மக்களுக்கு விளக்க வேண்டும் என அவர்கள் அறிக்கை வெளியிட்டிருந்தனர்.
ஆனால், முதல்வர் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இது தொடர்பான விவரங்களை அறிய தமிழக மக்கள் காத்திருப்பதால் முதல்வர் உரிய விளக்கம் அளிக்க வேண்டும்'' என்று கருணாநிதி கூறியுள்ளார்.