சேலம் தாதகாப்பட்டி பகுதியில் நேற்று முன்தினம் இரவு நடந்த பிரச்சாரத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தார். படம்: எஸ்.குரு பிரசாத் 
தமிழகம்

மக்களை ஏமாற்றிடவே 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு: சேலத்தில் டிடிவி.தினகரன் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

‘முதல்வர் பழனிசாமி மக்களை ஏமாற்றிட வேண்டி தற்காலிகமாக 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்,’ என சேலத்தில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் பேசினார்.

சேலம் தாதகாப்பட்டியில் அமமுக மற்றும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த 11 வேட்பாளர்களை ஆதரித்து, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் நேற்று முன்தினம் இரவு பேசியதாவது:

தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் பிறப்பு சான்றிதழ் முதல் இறப்பு சான்றிதழ் வாங்குவது வரையில் லஞ்சம் மலிந்து கிடக்கிறது. 8 வழிச்சாலை வந்தால் பொருளாதார வளர்ச்சியைக் காட்டிலும், ஒப்பந்ததாரர்களின் குடும்பம் வளர்ச்சியே பெரிதாக இருக்கும். சசிகலா காலில் விழுந்த முதல்வர் பழனிசாமி, அவரை யார் என்று தெரியாது என்கிறார். அவருக்கே அவரை யார் என தெரியாது என்று கூறினாலும் கூறுவார். முதல்வர் பதவியில் இருக்கின்ற பழனிசாமி, தேர்தல் முடிந்ததும் பதவியில் இல்லாமல் இருப்பார். முதல்வர் பழனிசாமி, மக்களை ஏமாற்றிடவே 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு என தற்காலிகமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதிமுக-வை தோற்கடிக்க வேண்டும் என்று திமுக-வுக்கு பொதுமக்கள் வாக்களித்து விடக்கூடாது. பேயை விரட்டி பிசாசை கொண்டு வந்த கதையாகிவிடும்.

மாலை 6 மணிக்கு மேல் டீ கடை முதல் பிரியாணி கடை வரையில் வசூல் வேட்டையும், கட்டப்பஞ்சாயத்து செய்து, பத்தாண்டு பதவியில் இல்லாத பசியை தீர்த்துக் கொள்வார்கள். கருத்துக்கணிப்பில் முன்னிலையில் இருப்பதாக திமுக கண்கட்டி வித்தை காட்டி வருகிறது.

தமிழகத்தில் சுகாதாரம், சாலை, சாக்கடை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தன்னிறைவு பெற்ற மாநிலமாகவும், நியாயமான, நேர்மையான ஆட்சியை பெற்றிட தேர்தலில் பொதுமக்கள் அமமுக-வுக்கு ஆதரவு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT